அரசு பள்ளியில் முப்பெரும் விழா
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையினால், இந்த ஆண்டிற்கான முக்கிய குறிக்கோளாக பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் என்ற வாசகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், முப்பெரும் விழாவாக, மரக்கன்று நடுதல், மீண்டும் 'மஞ்சப்பை' அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.விழாவில், வனத்துறை அலுவலர் சிவக்குமார், மரக்கன்றுகளை நடுதல், வனவிலங்குகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு, புவி வெப்பமடைதலுக்கு காரணம் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறினார். பள்ளி ஆய்வாளர் சுதாகர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி ஆகியோர், சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை பார்வையிட்டு, பள்ளி மணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பசுமைப்படை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. தலைமையாசிரியர் சுதாராணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அறிவியல் ஆசிரியர் சண்முகப்பிரியா, பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, மூத்த ஆசிரியர் விஜய் உள்பட பலர் பங்கேற்றனர்.