உரிமமின்றி பழச்செடி, தென்னங்கன்று விற்றால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
கிருஷ்ணகிரி உரிமமின்றி பழச்செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை விற்றால், சட்ட நடவடிக்கை பாயும் என, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் மணி எச்சரித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், பழச்செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய, 233 நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் முறையான உரிமம் பெற்றுள்ளனர். இப்பகுதியில் தனியார் நாற்று பண்ணையாளர்கள், தமிழகத்தில் இதர மாவட்ட விவசாயிகளுக்கும் பழச்செடிகள், காய்கறி நாற்றுகளை விற்பனை செய்கின்றனர். ஆகையால், தரமான காய்கறி நாற்றுகள், பழச்செடிகள், தென்னங்கன்றுகள் விற்பனை செய்வதை உறுதி செய்யவும், தவறு செய்வோர் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், விதை ஆய்வாளர்கள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆண்டில் சட்ட விதிகளை பின்பற்றாத, 14 நாற்று பண்ணைகளுக்கு சட்டப்படியான விளக்கம் கேட்டு, அவர்களின் உரிமங்கள் தற்காலிக நிறுத்தம் மற்றும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் செயல்பட்ட, 24 நர்சரிகளுக்கு சட்டப்படியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவு பெற்று, உரிமம் பெறாத இடத்திலுள்ள, காய்கறி நாற்றுகள் மற்றும் தென்னங்கன்றுகள் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நாற்று பண்ணை உரிமையாளர்கள் உரிய விற்பனை உரிமம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.பழச்செடிகள், தென்னங்கன்றுகள் மற்றும் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி நாற்றுகள் தொடர்பான இருப்பு பதிவேடு பராமரித்து, ரசீது வழங்க வேண்டும். உரிமம் பெற்றுள்ள நாற்றுப்பண்ணையாளர்களுக்கு மட்டுமே விதைகளை விற்பனை செய்வதுடன், ரசீதுகளில் உரிம எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும், விதை மற்றும் நாற்று விற்பனை உரிமம் பெற, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விதை ஆய்வு துணை இய க்குனர் அலுவலகம், 04342-230157, அல்லது தங்கள் பகுதி விதை ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.