231 ஸ்டால்களில் நிரம்பி வழியும் புத்தகங்கள் களைகட்டுகிறது மதுரை புத்தகத்திருவிழா குவிந்தன குழந்தைகளுக்கான புத்தகங்கள்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் மொத்தம் 231 ஸ்டால்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகளவில் உள்ளதால் குட்டீஸ்கள் செம குஷி. தாங்களாகவே ஸ்டால்களுக்குச் சென்று புத்தகங்களை வாங்கி மகிழ்கின்றனர். செப். 16 வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தகங்களை வாங்கலாம். தினமும் மாலை 6:00 மணிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கு நடைபெறும். அனுமதி இலவசம்.அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் பள்ளி மாணவர்கள் 2000 பேர், கல்லுாரி மாணவர்கள் 1500 பேரை பஸ்சில் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் தங்கள் அனுபவம் குறித்து வாசகர்கள் கூறியதாவது... புத்தகம் வெளியிட ஆசை
பிரவீன், சிவகாசி: கவிதை புத்தகங்களை விரும்பி படிப்பேன். காரணம், நானும் கவிதை எழுதுகிறேன். எனவே அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து இன்னும் நிறைய கவிதைகளை படைத்து புத்தகமாக வெளியிட ஆசை. ஒரு திரைப்பட பாடல் எப்படி எழுதப்படுகிறது, எதை உணர்த்துகிறது, ஒவ்வொருவரின் பார்வையில் எவ்வாறு சொல்லப்படுகிறது என்பதை அறிய புத்தகத் தேடலில் இறங்கியுள்ளேன். எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துகள் பிடிக்கும். வரலாறு, ஆராய்ச்சி நுால்கள் பிடிக்கும்
தயாநிதி, போடி: முதன் முதலாக புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். நாம் எவ்வளவு புத்தகங்கள் வாசிக்கின்றோமோ அந்தளவு அறிவும், பேச்சாற்றலும் நமக்கு கிடைக்கும். தினமும் மருந்து எடுத்துக் கொள்வதை போல புத்தகம் வாசிப்பேன். வரலாற்று நுால்கள், ஆராய்ச்சி நுால்களை விரும்பிப் படிப்பேன். எழுத்தாளர் மதிவண்ணனின் புத்தகங்கள் என்னை கவர்ந்தவை. குட்டீஸ்கள் ஹேப்பி
அபராஜித்தா, டி.வி.எஸ்., நகர், மதுரை: இதுவரை இல்லாத அளவிற்கு அதிக புத்தகங்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயதிற்கு ஏற்றவாறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குட்டீஸ்களுக்கான புத்தகங்கள் அதிகளவில் உள்ளதால் அவர்களே ஒவ்வொரு ஸ்டால்களுக்கும் சென்று ஆர்வமுடன் படிக்கின்றனர். காமிக்ஸ் புத்தகங்கள், எழுத்தாளர் அபிலாஷ் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும். குழந்தைகள் கேம்ஸ், அலைபேசியில் மூழ்குவதை தடுத்து அவர்களாகவே தேடிச் சென்று புத்தகம் படிப்பதற்கு இது போன்ற புத்தகத் திருவிழா உதவுகிறது. 20 நிமிட வாசிப்பு அவசியம்
பேராசிரியை ஜெனிபா, அச்சம்பத்து, மதுரை: ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகையான புத்தகங்கள் வாங்குவது வழக்கம். இந்தாண்டு தொழில்முறை வளர்ச்சி, தத்துவ புத்தகங்களை தேர்வு செய்துள்ளேன். பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள், குடும்பம் பணிச்சூழல் இரண்டையும் எவ்வாறு சமமாகப் பார்ப்பது, உள் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது, ஆளுமை வளர்ச்சி, சுயசரிதை சம்பந்தமான புத்தகங்களை வாங்கியுள்ளேன். அலைபேசி போன்ற கேட்ஜெட்ஸ்களில் வாசிப்பதில் நன்மையை விட தீமையே அதிகம். எனவே தினமும் 20 நிமிடங்களாவது புத்தகம் வாசிக்க வேண்டும்.இருமுடிஇந்நுாலாசிரியர் ரவிவர்ம தம்புரான், மலையாளத்தில் சபரிமலை ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் தற்போது நிலவும் மத பயங்கரவாதத்தையும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து புதிய பார்வையில் நாவலாக எழுதியுள்ளார். இதை படிக்கும் வாசகர்களுக்கு சுவாமி ஐயப்பனுடன் பயணிக்கும் உணர்வும், நினைத்த பொழுதெல்லாம் சபரிமலையில் அலைந்து திரிந்த உணர்வும் கிட்டும். இதை தமிழ் வாசகர்களும் அனுபவித்து மகிழும் வகையில் அழகு தமிழின் சுவையில் அரசியல், சமூக பின்னணியில் ஆன்மிகம் கலந்து பக்தி மணத்துடன் தமிழாக்கம் செய்துள்ளார் ஜி.வி. ரமேஷ் குமார்.ஆசிரியர் : ரவிவர்ம தம்புரான்ஜி.வி. ரமேஷ் குமார் (தமிழில்)வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை : ரூ.360பெண்ணே பேராற்றல் (பாகம் 1)பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என பெருமைப்படுகிறோம். ஆனால் ஒளவையார் பேசிய அரசியலும் இலக்கியமும் நம் நினைவுக்கு வர தாமதமாகிறது. அதன் பின்னரும் நிறைய பெண்கள் பேசினார்கள், எழுதினார்கள். நாம் அதை மறந்துவிட்டோம். அதை நினைவூட்டும் விதமாக இந்நுால் அமைந்துள்ளது. பெண்களும், அவர்களை புரிந்து கொள்ள ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நுால்.ஆசிரியர் : ப. திருமலைவெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை : ரூ.260தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் நீரின்றி விவசாயம் பொய்த்து, விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி விட்டன. மணல் கொள்ளையால் நதிநீர் படுகைகள் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. நீர்நிலைகளை துார்வாரும் சிந்தனையை ஆள்பவர்களிடம் துார்வார வேண்டியுள்ளது. தமிழகத்தின் ஆறு, ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட அனைத்து நீராதாரங்கள் பற்றிய முழுமையான புவியியல் பார்வையை எளிய தமிழில் இந்நுாலாசிரியர் கொடுத்துள்ளார்.ஆசிரியர் : ஜெகாதாவெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம்விலை : ரூ.200கிராமியக் கதைகள்இலக்கியத்தின் பழமையான உருவம் கதைதான். கவிதை தோன்றும் முன்னரே கதைகள் தோன்றின. குறிப்பாக கிராமியக் கதைகள் சமூகத்தையும் அதன் உறுப்பான குடும்பத்தையும் சித்தரிக்கின்றன. குடும்பப் பிரச்னைகளே கதைப் பொருளாக வருகின்றன. அப்பிரச்னைகளுக்கு வழிகாட்டும் முறையில் கேலியும், நகைச்சுவையும் கலந்து ஒரு நீதி சுட்டிக்காட்டப்படுகிறது. கதைகளுக்கு உரமளிப்பது பேச்சு வழக்கே. இந்நுாலில் உள்ள கதைகள் கோவில்பட்டி வட்டாரப் பேச்சு நடையில் அமைந்துள்ளன.ஆசிரியர் : கி.ராஜநாராயணன்வெளியீடு : அன்னம்விலை : ரூ.190
தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999க்குரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம்
புத்தகத் திருவிழாவில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில் (ஸ்டால் 4, 5) புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன.அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது 15 பாகங்கள், தொகுப்பாசிரியர் சமஸ் எழுதிய 'சோழர்கள் இன்று' புத்தகம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய 'உங்களில் ஒருவன்' புத்தகம் மற்றும் மகா பெரியவா, பொன்னியின் செல்வன், பச்சை புடவைக்காரி புத்தகத் தொகுதிகள், ஆன்மிக, அறிவியல், நவீன கதை, தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இங்குள்ளன.தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம்.