| ADDED : மே 10, 2024 05:04 AM
மதுரை: செல்லம்பட்டியில் வேளாண் வணிகத்துறையின் கீழ் துவங்கப்பட்ட ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் 22 மளிகைப் பொருட்களின் விற்பனையை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தொடங்கி வைத்தார்.அவர் கூறியதாவது: தமிழக அரசின் ஐ.ஏ.எம்.பி., திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. அரிசி, தானியங்கள், தேங்காய் உட்பட பல்வேறு விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த நிறுவனம் மூலம் பொருட்களை விற்றனர். முதல் முறையாக வயலில் விளைந்த 22 வகை மளிகைப் பொருட்களை மாதாந்திர மளிகை திட்டமாக நுகர்வோருக்கு வழங்குகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து வாங்கும் போது விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.வேளாண் அலுவலர் மீனா, உதவி அலுவலர் சர்மிளா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் ரஞ்சித்குமார், பாண்டிகுமார், ஆறுமுகம், திருநாவுக்கரசு பங்கேற்றனர். சி.இ.ஓ., கவிஹரன் ஏற்பாடு செய்திருந்தார்.