| ADDED : ஜூலை 11, 2024 05:34 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா நாளை மறுநாள் (ஜூலை 13) காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.முன்னதாக நாளை (ஜூலை 12) மாலை 6:00 க்கு மேல் இரவு 7:00 மணிக்குள் அங்குரார்ப்பணம், ஜூலை 17ல், சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் காலை 6:45 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். ஜூலை 20 இரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.ஜூலை 21ல் காலை 6:45 மணிக்கு மேல் 7:20 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.அன்று மாலை ஆடி பவுர்ணமி நாளில்பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில் படி பூஜை, சந்தனம் சாத்துதல் நடைபெறும். ஜூலை 23ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும். விழா நாட்களில் கலைநிகழ்ச்சி நடைபெறும். ஆக.,4ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 7:15 மணிக்குள் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளுல் நடக்கிறது.துணை கமிஷனர் கலைவாணன் கூறியதாவது: விழா குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமையில் நடந்தது. பெரியார் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும்படி தெரிவித்துள்ளோம். இதனால் கள்ளந்திரி வாய்க்காலில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு பக்தர்கள் குளிக்க முடியும்.தேரின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய பொதுப்பணித்துறையினர் மூலம் ஆய்வு செய்து சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லாரிகள் மூலமும் குடிநீர் சப்ளை செய்ய உள்ளோம். பக்தர்களுக்கு இடையூறின்றி வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்படும். சுவாமிகள் புறப்பாடு வாகனங்கள் மராமத்து நடக்கிறது என்றார்.