உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரையில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : மதுரை பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு: பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் ரூ.85 கோடியே 69 லட்சத்து 71 ஆயிரத்து 850 மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு 2020 அக்டோபரில் ரூ. 20 கோடியில் உயிர்காக்கும் 'லினாக்' கதிரியக்க கருவி பயன்பாட்டிற்கு வந்தது. மண்டல புற்றுநோய் மையம் என்ற பெயர் பலகை மட்டுமே உள்ளது. மூன்றரை ஆண்டுகளாகியும் அங்கு உள், வெளிநோயாளிகள் பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர் அமைக்கவில்லை. புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆப்பரேஷன் பிரிவுகள் மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் இயங்கி வருகின்றன.இரு மருத்துவமனைகளுக்கும் அலையும் புற்றுநோயாளிகள் பொருளாதாரம், உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால் பாலரெங்காபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.கோவையில் மண்டல புற்றுநோய் மையம் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுகிறது. அதுபோல் தஞ்சாவூரில் பணி நடைபெறுகிறது.தென் மாவட்ட நோயாளிகள் பயனடைய பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைக்க தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்கள் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்