| ADDED : மே 28, 2024 03:49 AM
மதுரை : 'மதுரையில் பம்பிங் ஸ்டேஷன்கள் (கழிவு நீரேற்று நிலையங்கள்) பணிகளையும், வார்டு பணிகளையும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் பணிப்பளு ஏற்படுகிறது' என மாநகராட்சி உதவி பொறியாளர்கள் (ஏ.இ.,க்கள்) புலம்புகின்றனர்.மாநகராட்சியில் ஏ.இ.,க்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு ஏ.இ.,க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் ஒதுக்கப்பட்டுஉள்ளன. வார்டுகளில் குடிநீர் சப்ளை, பாதாளச் சாக்கடை பராமரிப்பு, கண்காணிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு, வீடுகளுக்கு பிளான் அனுமதி, வீடு, ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம், குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்புகள் வழங்கல், புதிய ரோடு அமைப்பது, ரோடுகள் பராமரிப்பு, அரசு அலுவலகங்களில் மராமத்து என பல்வேறு பணிகள் உள்ளன.அதேநேரம் பம்பிங் ஸ்டேஷன் பணியில் தெருக்களில் கழிவு நீர் உடைந்து ஓடிவிடாதபடி இயக்குவது, ஜெனரேட்டர் இயங்குவதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு ஏ.இ.,க்கு 3 அல்லது 4 பம்பிங் ஸ்டேஷன்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சவாலாக உள்ளதாக புலம்புகின்றனர்.ஏ.இ.,க்கள் கூறியதாவது: நகரில் 30க்கும் மேற்பட்ட பம்பிங் ஸ்டேஷன்கள் உள்ளன. தினமும் 80 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதை கால்வாய் மூலம் அவனியாபுரம், சக்கிமங்கலம் பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வது, சுத்திகரிப்பை ஆய்வு செய்வது போன்ற பணிகள் சவாலாக உள்ளன. இதுதவிர வார்டுகளில் உள்ள பணிகளையும் கவனிப்பதும் மனஉளைச்சலாக உள்ளது. பம்பிங் ஸ்டேஷன்களை கண்காணிக்க தனியாக ஏ.இ.,க்களை நியமிக்க வேண்டும். 'இரட்டை சவாரி' பணிகளுக்கு கமிஷனர் தினேஷ்குமார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.