| ADDED : மே 10, 2024 05:13 AM
மதுரை: பழமையும் பாரம்பரியமும் மிக்க திருவேடகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராம சுற்றுலாவாக சுற்றுலாத்துறை அறிவிக்க வேண்டும்.சோழவந்தான் செல்லும் வழியில் உள்ளது திருவேடகம். இங்குள்ள திருவேடகநாதர் சிவன் கோயிலுக்கு 7ம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தர் தரிசித்து பாடல் பாடியுள்ளார். மதுரையில் நடந்த சமயப் போரில் பாடல் எழுதிய ஏடுகளை திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட போது ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து திருவேடகத்தில் கரைசேர்ந்த பெருமையுடையது. தவிர மூல வைகையில் இருந்து கிழக்கு மேற்காக பயணிக்கும் வைகையாறு சோழவந்தான் வரும் போது திருவேடகத்தில் வடக்கு தெற்காக காசியில் இருப்பதைப் போன்று பயணித்து மீண்டும் மேலக்கால் பகுதியில் கிழக்கு மேற்காக செல்கிறது.இத்தனை பெருமை வாய்ந்த திருவேடகத்தில் திருவேடகநாதர் கோயில், ஆற்றின் கரையில் திருவேடக படித்துறைகள் உள்ளன. படித்துறையில் சிவன், பார்வதி ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்திலும் தனியாக விநாயகர், முருகன் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. நுாறடி அகலமுள்ள படிக்கட்டின் ஒரு பகுதி சேதமடைந்து ஆற்றில் இறங்கியுள்ளது. மக்கள் அதை பயன்படுத்த முடியவில்லை. தவிரவும் குப்பை கொட்டும் இடமாக்கி வருகின்றனர்.இங்கு அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. படித்துறையில் குடிநீர், கழிப்பிடம், குளியலறை, உடை மாற்றும் அறை என எந்த வசதியும் இல்லை. சிலர் உடைகளை களைந்து அப்படியே வீசி செல்கின்றனர். பெருமை வாய்ந்த படித்துறையை ஒட்டி தடுப்பணை அமைத்தால் மக்கள் குளித்துச் செல்ல முடியும். இந்த இடத்தை கிராம சுற்றுலா தலமாக்கினால் உள்ளூர், வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளும் பயன்பெற முடியும்.