உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தவறான தகவலை நம்ப வேண்டாம் வனப்பாதுகாவலர் வேண்டுகோள்

தவறான தகவலை நம்ப வேண்டாம் வனப்பாதுகாவலர் வேண்டுகோள்

சென்னை: 'யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்ட வரைவு குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு வனத்துறை சார்பில், தமிழகத்திற்கான யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டது. வனத்துறை இணையதளத்தில், பொதுமக்கள் தகவலுக்கும், யானை ஆய்வாளர்களின் ஆலோசனைகள் பெறுவதற்கும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வரைவு, யானை வழித்தட ஒருங்கிணைப்பு திட்டம் குறித்த முதல்நிலை ஆவணமாகும்.அந்த வரைவின் மீது பெறப்பட்ட கருத்துக்கள், தற்போது மாவட்ட வாரியாக தொகுக்கப்படுகின்றன. இப்பணி முடிந்த பிறகு, யானை இருப்பிட பகுதியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும்.கூட்டத்தில் பெறப்படும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பதிவு செய்யப்படும். அக்கூட்டத்தில் யானைகளின் துண்டுபட்ட வாழிடங்களை இணைப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு தொகுக்கப்படும்.அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வழித்தடத்திற்கும், தொகுக்கப்பட்ட திட்டம் அடிப்படையில் இறுதி யானை வழித்தட ஒருங்கிணைப்பு திட்டம் தயாரிக்கப்படும். அவ்வாறு தொகுக்கப்பட்ட இறுதி ஆவணம், மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்ட இறுதி ஆவணத்தில், மனித மற்றும் வன உயிரின மோதல்களை தவிர்க்கவும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்படும்.அந்த இறுதி ஆவணமே, மாநில அரசால் பரிசீலிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, யானைகள் வழித்தட ஒருங்கிணைப்புதிட்ட வரைவு குறித்த, தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை