உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயிலில் செங்கோல் நடைமுறையை மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மீனாட்சி அம்மன் கோயிலில் செங்கோல் நடைமுறையை மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் பட்டாபி ேஷகத்தின்போது செங்கோலை அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, பழங்கால நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை கோச்சடை தினகரன் தாக்கல் செய்த மனு: மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.,19 ல் பட்டாபி ேஷகம் நடைபெறும். இக்கோயிலில் சைவ காமிகா, காரணா ஆகமங்கள்படி திருவிழா, பூஜைகள், இதர நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி அம்மனின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் பட்டாபி ேஷகம்.பாண்டிய மன்னன் கையில் இருந்த செங்கோல் பட்டாபி ேஷக நாளில் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் முன்பு ஆகமங்களின்படி அர்ச்சகர்களால் மதுரையை ஆட்சி செய்த மன்னர்களிடம் 'செங்கோல்' ஒப்படைக்கப்பட்டது.ஆகமங்களின்படி செங்கோல் பெறுபவர் ஆட்சியாளராகவோ அல்லது கோயிலை நிர்வகிப்பவராகவோ இருக்க வேண்டும். இவர் திருமணமாகி மனைவியுடன் சேர்ந்து வாழ்பவராக இருக்க வேண்டும். இந்நடைமுறை 1732 வரை மன்னர் விஜயரங்க சொக்கநாதர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்டது. அவர் இறந்தபின் அவரது சகோதரர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.1733ல் ஆகமங்களுக்கு முரணாக ராஜா குரு (அரசர்களின் புரோகிதர்) பேரய்யா பட்டரிடம் செங்கோலை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அவர் இறந்த பின் கோயில் மற்றும் கோட்டை நிர்வாக பொறுப்பிலிருந்த அனந்தகுல சதாசிவ பட்டரிடம் (விக்ரபாண்டிய பட்டர்) 1734ல் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. 1939 வரை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பட்டாபி ேஷக நாளில் செங்கோல் பெற்றனர். இவை 'சீதாள புத்தகத்தில்' பதிவு செய்யப்பட்டுள்ளன.1939ல் கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. திருமணமாகாதவர் அல்லது வாழ்க்கைத்துணை இல்லாமல் அறங்காவலர் குழு தலைவர் இருக்கும்பட்சத்தில் செங்கோலை பெற அவருக்கு ஆகம நடைமுறைகள்படி தகுதி இல்லை. செங்கோலை கோயில் செயல் அலுவலருக்கு வழங்க வேண்டும். அவருக்கும் தகுதி இல்லாவிடில் அதை அனந்தகுல சதாசிவ பட்டரின் குடும்ப உறுப்பினருக்கு வழங்க வேண்டும். அந்நபரும் தகுதியற்றவராக இருந்தால் சுவாமி சிலையின் அருகில் வைக்க வேண்டும். வேறு யாருக்கும் வழங்க முடியாது. திருமணமாகாத அல்லது வாழ்க்கைத்துணை இறந்துவிட்ட யாருக்கும் செங்கோல் வழங்கப்படவில்லை.தற்போது கோயில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி உள்ளார். இவரது கணவர் பழனிவேல்ராஜன் (தமிழக அமைச்சராக பதவி வகித்தபோது) இறந்துவிட்டார். ஆகமங்கள் மற்றும் பாரம்பரிய மத நடைமுறைகளின்படி செங்கோலை பெறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. கோயில் செயல் அலுவலர் திருமணமாகாதவர். அவருக்கும் செங்கோலை பெற தகுதி இல்லை.வழக்கமான நடைமுறைப்படி செங்கோலை அனந்தகுல சதாசிவ பட்டர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குடும்பத்தில் தகுதியான நபர்கள் இல்லையெனில் செங்கோலை சுவாமி சிலையின் அருகில் வைக்க வேண்டும்.அறநிலையத்துறை சட்டப்படி கோயிலின் பழங்கால பழக்க வழக்கங்களை பின்பற்றுவது அவசியம். இதை வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். இவ்வாறு குறிப்பிட்டார்.அவசர வழக்காக நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.அரசு தரப்பு: செங்கோல் பெறுவது மத நடவடிக்கை அல்ல. மதச்சார்பற்ற நடவடிக்கை. வாழ்க்கைத் துணையை இழந்தவர் என்பதால் செங்கோலை பெறுவதற்கு ஆகமங்கள்படி எவ்வித தடையும் இல்லை. மனுதாரர் தரப்பு கூறுவது ஏற்புடையதல்ல. அறங்காவலர் குழு நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கை இந்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: திருவிழாவிற்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இம்மனு ஏற்புடையதல்ல. அறங்காவலர் குழு தலைவர் செங்கோல் பெறுவதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர் அறநிலையத்துறை சட்டப்படி அதன் இணைக் கமிஷனரிடம் மனு அளிக்கலாம். அதை அவர் அடுத்த 2025 திருவிழாவிற்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஏப் 17, 2024 16:55

அப்படி என்றால் கட்டிய மனைவியை கை விட்டு ஓடி வந்தவர் நாட்டின் பிரதமர் ஆகலாமா?


Dharmavaan
ஏப் 17, 2024 14:06

கோயில் நடைமுறைகளில் எந்த ஆழ்ந்த அறிவும் திறனும் இன்றி ஏதோ மேம் போக்காக/ அரைவேக்காட்டு தனமாக தீர்ப்பு இதில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை


ஆரூர் ரங்
ஏப் 17, 2024 11:03

மனைவி இல்லாத ஆண்மகன் செய்யும் பல யாகங்கள் பயனற்றவை என்பது சாஸ்திரம். . அது போல சில சாங்கியங்களை செய்ய மணத்தகுதியை ஹிந்து நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன. கள்ளழகர் அணியும் ஆடையின் நிறத்திலும் அர்த்தம் காணும் நம்பிக்கைகள் உண்டு. இவற்றிலெல்லாம் கோர்ட் தலையீடு துளியும் சரியல்ல.


சுகு
ஏப் 17, 2024 08:56

இதெல்லாம் அறங்காவலர் நியமிக்கப்படும் முன்பே யோசித்திருக்க வேண்டும். இதற்கு முன்பு உயர்த்ருமதி ராதா தியாகராஜன் அந்த பதவியில் இருந்திருக்கிறார். அவர் கணவர் 1974 ல இயற்கை எய்தி விட்டார். அப்போது என்ன வழக்கத்தை மேற்கொண்டனர் என்று பார்த்து முடிவு எடுக்கலாம்.


Kanns
ஏப் 17, 2024 08:43

Courts/Govts Must Not Interfere in Age Old Religious-Temple Practices Unless Grave Errors-Injustices are there-here none


மேலும் செய்திகள்