உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலையில் போலி கல்விச்சான்று; உயர்கல்வித்துறை செயலர் அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு

பல்கலையில் போலி கல்விச்சான்று; உயர்கல்வித்துறை செயலர் அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ் வழியில் படித்ததற்கு வேலைவாய்ப்பில் சலுகை பெற சிலர் மதுரை காமராஜ் பல்கலையில் போலிச்சான்று பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு: தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜன.,20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்து விட்டு, பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து சான்று பெற்றவர்கள்.பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும் அதற்குரிய இடஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2021 மார்சில் நீதிபதிகள் அமர்வு, 'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலிச்சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.டி.என்.பி.எஸ்.சி., தரப்பு: மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக பி.எஸ்.டி.எம்., சான்று பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பணியில் சேர்ந்துள்ள சிலருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு: குரூப் 1 தேர்விற்காக 4 பேர் மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக பி.எஸ்.டி.எம்., சான்று பெற்றுள்ளனர். இதற்கு பல்கலையின் 2 ஊழியர்கள், 3 தனிநபர்கள் உதவி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. வழக்கு பதிய அனுமதி கோரி உயர்கல்வித்துறைக்கு மார்ச் 27 ல் கடிதம் அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: உயர்கல்வித்துறை செயலர் செப்.,9 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை