உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் போதையில் போட்டோ ஷூட் * லைக்கிற்காக லைப்பை தொலைக்கும் இளைஞர்கள்

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் போதையில் போட்டோ ஷூட் * லைக்கிற்காக லைப்பை தொலைக்கும் இளைஞர்கள்

மதுரை:மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இரவில் போதையில் மதுபாட்டில்களுடன் தடுப்புச்சுவரில் ஆபத்தான வகையில் நின்று இளைஞர்கள் போட்டோ 'ஷூட்' எடுத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் அதை பதிவேற்றம் செய்து 'லைக்' வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரையின் அடையாளங்களுள் ஒன்றான இந்த பறக்கும் பாலம் 7.5 கி.மீ., நீளம் உடையது. இப்பாலத்தில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வது தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன் கூட, பாலத்தின் தடுப்புச்சுவரை தாண்டி டூவீலரில் 'பறந்ததில்' இரு இளைஞர்கள் இறந்தனர். பாலம் திறக்கப்பட்ட புதிதில் இளைஞர்கள் வேகமாக செல்வதை தடுக்கவும், வழிப்பறியை தடுக்கவும் இரவு மட்டும் பாலத்தில் செல்வதற்கு போலீசார் தடைவிதித்தனர். பல கோடி செலவு செய்து பாலம் கட்டி, அதில் பயணிக்க தடை விதிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தடை விலக்கப்பட்டது. தற்போது இரவில் இளைஞர்கள் சிலர் பாலத்தில் ஆங்காங்கே நின்று 'போட்டோ ஷூட்' எடுத்து வருகின்றனர். டூவீலரின் 'ேஹண்ட் பாரை' பிடிக்காமல் ஓட்டுவது, ஒற்றை டயரில் மட்டும் 'பறப்பது' என இவர்களது அட்டகாசங்கள் தொடர்கின்றன.போலீசார் ரோந்து வரும்போது 'நல்ல பிள்ளையாக' டூவீலரில் கிளம்பி ஒரு ரவுண்ட் போய்விட்டு மீண்டும் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுக்கூடி கும்மாளம் அடிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் 'போட்டோ ஷூட்' எடுத்தனர். அதில் ஒருவர் பீர் பாட்டிலை தலையில் ஊற்றியவாறே தடுப்புச்சுவரில் இருந்து குதிப்பது போல் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.இதுபோன்ற செயல்களை தடுக்காவிட்டால் இன்னும் 'மோசமான' செயல்களில்கூட ஈடுபட வாய்ப்புள்ளது. சமூகவிரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறிவிட்ட மதுரை - நத்தம் பாலத்தில் கூடுதல் போலீசாரை நியமித்து ரோந்து வந்தால் மட்டுமே இளைஞர்களின் 'இம்சை'களை தடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ