| ADDED : ஆக 22, 2024 03:05 AM
மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான வலைவீசி தெப்பக்குளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், செயல் அலுவலர் முடிவெடுக்க வேண்டியுள்ளதால் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகராக பணிபுரிகிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தொன்மையான வலைவீசி தெப்பக்குளம் மற்றும் அதன் கரையில் அமைந்திருந்த காளக்கோயில் என்ற வழிபாட்டுத் தலமும் அழிக்கப்பட்டுள்ளது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் நிகழ்த்திய திருவிளையாடல்களை நினைவுப்படுத்தும் வகையில் மண்டபங்கள், தெப்பக்குளங்கள் மன்னர்கள் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன. திருவிளையாடல் புராணத்தின் 57 வது திருவிளையாடலான வலைவீசி திருவிளையாடல் மீனாட்சி சுந்தரேஸ்வரரால் நிகழ்த்தப்பட்டது. தை மாத தெப்பத்திருவிழாவின் எட்டாவது நாளில் வலைவீசி திருவிளையாடல் வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோயிலில் நடந்து வந்தது.வலைவீசி தெப்பக்குளம் மதுரை பொன்மேனி மாநகராட்சி வார்டு 5 ல் உள்ளது. 1 ஏக்கர் 81.56 சென்ட் பரப்பளவில் இருந்த வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோயில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. தரைத்தளம் சமப்படுத்தப்பட்டுள்ளது. இது மத உணர்வை புண்படுத்தும் செயல். வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயில் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க அறநிலையத்துறை கமிஷனர், மதுரை கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோயிலை மீட்டு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: வலைவீசி தெப்பக்குளம் அறங்காவலர்களுக்கு ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அறங்காவலர்கள் மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு பதில் அளித்தனர். அதை அவர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது என அரசு தரப்பு கூறியது. செயல் அலுவலரின் நடவடிக்கையை எதிர்த்து 2023 ல் சில அறங்காவலர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். பிரச்னைக்கு முடிவெடுக்கும் செயல் அலுவலரிடம் தங்கள் விளக்கங்களை முன்வைக்கும் வகையில் வழக்கை வாபஸ் பெற்றனர். இச்சூழலில் பொது நல வழக்கை நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணத்தை நாங்கள் காணவில்லை. முடிவெடுக்கும் செயல் அலுவலர் முன் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட நிலம் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. இது பதிவு செய்யப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.