பழைய வழித்தடங்களை மாற்றித்தாங்க மினிபஸ் உரிமையாளர்கள் கேட்குறாங்க
மதுரை: ''புதிய மினி பஸ் திட்டத்தில் பழைய வழித்தடங்கள் பாதிக்காத வகையில் 25 ஆண்டுகளாக தொழில் நடத்துவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'' என மதுரை மாவட்ட மினிபஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.தமிழக அரசு புதிய விரிவாக்க மினிபஸ் திட்டம் மே 1 ல் துவங்க உள்ளது. இதற்காக புதிய வழித்தடங்களை கண்டறியும் பணிகள் நடக்கின்றன. அத்தடங்களை விரும்புவோர் பெற்று மினிபஸ்களை இயக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மினிபஸ்களை இயக்குவோர், தங்களுக்கான வழித்தடங்கள் பாதிக்காத வகையில், ஏற்கனவே இயங்கும் வழித்தடங்களில் 2 கி.மீ., கூடுதலாக இயக்கலாம் என அரசாணை உள்ளதால் அதனை செயல்படுத்திய பின், புதிய வழித்தடங்களை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மதுரை மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கத்தினர் துணைத் தலைவர் அகமது, செயலாளர் சிராஜூதீன், பொருளாளர் குணா மற்றும் அபுபக்கர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வடக்கு ஆர்.டி.ஓ.,வை சந்தித்தனர். அகமது கூறியதாவது: 25 ஆண்டுகளாக மினிபஸ்களை இயக்குகிறோம். புதிய திட்டத்தில் பழைய மினிபஸ்களுக்கு பாதிப்பின்றி வழித்தடம் கண்டறியப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.எனவே புதிய வழித்தடம் வழங்கும்போது எங்களையும் கருத்தில் கொண்டு, எங்கள் பாதை பாதிக்காத வகையில் அனுமதிக்க வேண்டும். எங்கள் வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்கி, பழைய வழித்தடங்களை மாற்றித் தரவேண்டும் என்றார்.