உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி கொடி, டீ-சர்ட் கூடாது:

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி கொடி, டீ-சர்ட் கூடாது:

மதுரை விருநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான டீ-சர்ட்கள் அணியாமல், கொடிகள் இடம்பெறாமல் இருப்பதை அரசுத்தரப்பில் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் சந்தனகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திரு ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி இன்று (ஆக.,7) தேரோட்டம் நடக்கிறது. முற்காலத்திலிருந்தே அனைத்து சமூகத்தினரும் பங்களிப்பு செய்யும் வகையில் தேர் திருவிழா நடந்தது. அதாவது சீர்பாதம், பறையடித்தல், எம்புதடி போடுதல், எண்ணெய் கொடுத்தல் சம்பந்தப்பட்ட சமூகத்தினரால் செய்யப்பட்டது. இவை மாறி சமூக நலன் கருதி அனைத்தும் அரசு சார்பில் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக தேர் பின்புறம் எம்புதடி போடுவதற்கு உரிமை இருப்பதாகக்கூறி (தற்போது எம்புதடி போடுவதில்லை) ஒரு சமூகத்தினர் தங்கள் கொடி, மேளதாளத்துடன் ஜாதித் தலைவர்கள் படம் பொறித்த டீ-சர்ட் அணிந்து கோஷம் எழுப்புகின்றனர். ஆண்டாளை தரிசிக்க விடாமல் பக்தர்களை தடுக்கின்றனர்.சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் அல்லது ஜாதித் தலைவர்களின் படங்கள், ரிப்பன், துண்டுகள், கொடிகள், டீ-சர்ட்களுடன் தேரோட்டத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான கோஷம் எழுப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: ஜாதி ரீதியான டீ-சர்ட்கள் அணியாமல், கொடிகள் இடம்பெறாமல் இருப்பதை அரசுத்தரப்பில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !