ஊராட்சிகளில் பயன்பாடு இல்லாத உரத்தயாரிப்பு கூடம்
பேரையூர் : போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால் பெரும்பாலான ஊராட்சிகளில் உரம் தயாரிப்பு கூடங்கள் பயன்பாடின்றி முடங்கியுள்ளன.பேரையூர் தாலுகாவில் சேடபட்டி, டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களில் 73 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் துாய்மை இந்தியா திட்டத்தில் குப்பையை மட்கும், மட்காதவை என தரம் பிரிக்கின்றனர்.அதில் மட்கும் குப்பையை உரம் தயாரிக்கும் வகையில் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் சில மாதங்களே அவை பயன்பாட்டில் இருந்தன.பின் இந்தக் கூடங்கள் பயன்பாடின்றி முடங்கின. ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை அப்பகுதி கண்மாய்கள், நீரோடைகள், ரோட்டோரம் கொட்டுவதும், அவற்றை தீ வைத்து எரிப்பதும் தொடர்கிறது. குப்பையை பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. ஊராட்சிகளில் குறைந்தளவு துாய்மை பணியாளர்களால் இத்திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை. ஊராட்சிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான துாய்மை பணியாளரை நியமித்து தரம்பிரித்து மறுசுழற்சி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.