உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய்களை மறந்த அதிகாரிகள்; திசை மாறிச்செல்லும் மழைநீர் கேள்விக்குறியாகுது விவசாயம்

கால்வாய்களை மறந்த அதிகாரிகள்; திசை மாறிச்செல்லும் மழைநீர் கேள்விக்குறியாகுது விவசாயம்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றுக்கு தண்ணீர் கொண்டு வரும் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய் விட்டன. சில இடங்களில் துார்ந்து போயுள்ளன. இதனால் கால்வாயில் வரும் மழைநீர் திசைமாறிச் சென்று வீணாகிறது. இத்தாலுகாவில் ஆறுகளோ, அணைகளோ கிடையாது. மானாவாரி நிலங்களும், ஐம்பது சதவீத நிலங்கள் கண்மாய் நீரை பெற்றும் சாகுபடியாகின்றன.கண்மாயில் நீர் தேங்கினால் நேரடி பாசனம், ஆயிரக்கணக்கான கிணறுகளில் நீர் சுரப்பு ஏற்பட்டு இறவை சாகுபடியும் நடக்கும். நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களை பல ஆண்டுகளாக துார்வாராதது, கால்வாய்களை பராமரிக்காதது போன்ற காரணங்களால்பல கண்மாய்கள் வறண்டுள்ளன. சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த காடாக காட்சியளிக்கின்றன.

குப்பை மேடாகும் கண்மாய்கள்

ஊரை ஒட்டிய பல கண்மாய்கள் குப்பைத் தொட்டியாக, கழிவு நீர் தேங்கும் கேந்திரமாக மாறி உள்ளன. கண்மாய்களுக்கு நீர் வராததற்கு ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதே காரணம். கண்மாய்க்குள் விவசாயம் செய்வோர் கண்மாயில் தண்ணீர் தேங்க விடாமல் நீரின் போக்கை மாற்றிவிடுவதும் வாடிக்கையாக நடக்கிறது.பல இடங்களில் 20 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 2 மீட்டராக சுருக்கி விட்டனர். பல ஏக்கர் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறின. ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் சுரப்பு குறைந்து மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

விவசாயிகள் கூறுவது என்ன

கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய, நீர்வளத்துறை நிர்வாகங்கள் அதனை எட்டிக்கூட பார்ப்பது இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றும்படி பலமுறை விவசாயிகள் மனுக்கொடுத்தும் பயனில்லை. கால்வாயில் புதர்மண்டி யுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடிவதில்லை. மழைக்காலம் துவங்கும் முன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்தரம் கண்மாய்களை உடனே பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ