| ADDED : ஜூலை 29, 2024 11:26 PM
மதுரை: ''சுதந்திரத்திற்கு பின் தேச வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நிறுவனர் தினவிழா, கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு விழா, கல்லுாரி தலைவர் உமா கண்ணன் தலைமையில் நடந்தது. செயலர் கே.தியாகராஜன் வரவேற்றார். திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசளித்து கவர்னர் ரவி பேசியதாவது:தமிழகம் தேசிய அளவில் ஆன்மிக பூமியின் தலைநகராக இருந்தது. பக்தி இலக்கியம் மேலோங்கி இருந்தது. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 1821ல் கல்வி குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் பள்ளிகள், கல்லுாரிகளில் திருவாசகம் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. பிற மாகாணங்களில் மாநில மொழிக் கொள்கையை தாண்டி ஆங்கிலமும் அதிகமாக வளர்ந்திருந்தது.ஆனால், 1947க்கு பின் தமிழகத்தில் கல்வியறிவு பெறாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது தான் தேச நலனில் அக்கறை கொண்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் போன்ற, தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள், கல்வி நிறுவனங்களை தொடங்கினர். 75 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த கல்லுாரி ஏழைகளுக்கான கல்லுாரியாக இன்றும் செயல்படுகிறது.சமுதாய வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தியாகராஜர், அழகப்பா, அண்ணாமலை போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாகின.இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன் பெற்றனர். தேச வளர்ச்சிக்கு இதுபோன்ற சிறந்த கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகம். ஆனால் தற்போது ஒரு பேராசிரியர் 30 கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றுவதாக கணக்கு காட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.சுதந்திரத்திற்கு பின் அரசியலால் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. எனவே தற்போதைய கல்வி முறையில் தெளிவான அரசியல் குறித்து பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் கருமுத்து கண்ணன் நினைவு குறித்து பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் சொற்பொழிவாற்றினார்.கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி அறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியை சாரதா நம்பி ஆருரனுக்கு 'உரை இசை அரசி' விருது வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பாண்டியராஜா நன்றி கூறினார்.