சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட, 4 கோடி ரூபாய்க்கு சொந்தம் கொண்டாடி, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், ரயில்வே கேன்டீன் ஒப்பந்ததாரர் ஆஜரானார்.லோக்சபா தேர்தலின் போது, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது. இது, அக்கட்சி சார்பில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்நிலையில், 4 கோடி ரூபாய்க்கு சொந்தம் கொண்டாடி, ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே கேன்டீன் நடத்தி வரும் முஸ்தபா என்பவர், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உண்மையில் அவரது பணம் தானா; இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.