ஆய்வுக்கூட்டமா, தி.மு.க., கூட்டமா அ.தி.மு.க., அதிருப்தி
மதுரை: மதுரையில் மேற்கு சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் நடத்தப்படுவது கட்சி கூட்டமா, அரசு சார்பில் நடக்கும் ஆய்வுக் கூட்டமா. அரசு ஆய்வுக் கூட்டம் என்றால் அ.தி.மு.க., கவுன்சிலர்களை ஏன் அழைக்கவில்லை என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.மேற்கு தொகுதி மாவட்ட செயலாளராக அமைச்சர் மூர்த்தி பொறுப்பேற்ற பின் இதுபோன்ற கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். பரவையில் இரண்டு நாட்களுக்கு முன் மூர்த்தி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்து, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அதுபோல் நேற்று மாநகராட்சி 64 வது வார்டு பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் உள்ள கல்யாண மண்டபத்தில் தி.மு.க., மண்டலம் 2ன் தலைவர் சரவணபுவனேஷ்வரி தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் உதவி கமிஷனர், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட வார்டுகளின் தி.மு.க., வட்ட, பகுதி செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.அ.தி.மு.க., மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜ் கூறியதாவது: நேற்று எனது வார்டில் குறைதீர் கூட்டம் நடந்தது. அதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை. தி.மு.க., சார்பில் அந்த கூட்டம் நடந்தால் மாநகராட்சி அதிகாரிகள் ஏன் பங்கேற்க வேண்டும். மேற்கு தொகுதியில் நடப்பது கட்சி கூட்டமா அல்லது அரசு சார்பில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்களா என்பதை கலெக்டர் சங்கீதா, கமிஷனர் சித்ரா விளக்க வேண்டும். அரசு சார்பில் நடப்பது என்றால் அ.தி.மு.க., கவுன்சிலர்களை அழைக்க வேண்டும் என்றார்.