உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 431 ஆண்டுகளாக கோயில் விழாவில் நாடகம் 35 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கிறது

431 ஆண்டுகளாக கோயில் விழாவில் நாடகம் 35 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கிறது

அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் தானாய் தோன்றிய தனி லிங்க பெருமாள் கோயில் மாசி பொங்கல் விழாவில் 431வது ஆண்டாக அப்பகுதியை சேர்ந்த திருமலை மெச்சனார் குடும்பத்தினர் சார்பில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடந்தது.அக்குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது: பல தலைமுறைகளாக இந்த நாடகத்தை நடத்தி வருகிறோம். எங்களின் முன்னோர் திருப்பரங்குன்றம் கோயில் முன் நடத்திய நாடகத்தைப் பார்த்த மன்னர் திருமலை நாயக்கர், பாராட்டி செப்பு பட்டயம் வழங்கியுள்ளார். அக்காலம் முதல் தற்போது வரை திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் தேரோட்ட நாளில் நாடகம் நடத்தி வருகிறோம். அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பங்காளி குடும்பத்தினர் சார்பில் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

35 நாட்கள் நாடகம்:

வலையங்குளம் தானாய் தோன்றிய தனி லிங்க பெருமாள் கோயிலிலும் 431வது ஆண்டாக நாடகம் நடத்துகிறோம். இங்கு முன்பு தொடர்ந்து அறுபது நாட்கள் நாடகம் நடத்தியுள்ளோம்.இந்தாண்டு மகா சிவராத்திரி முதல் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் தொடங்கி தொடர்ந்து 35 நாட்களுக்கு வள்ளி திருமணம், சின்ன கருப்பு பெரிய கருப்பு உள்பட பல பக்தி நாடகங்கள் விடிய விடிய நடைபெறும். 35வது நாள் பட்டாபிஷேகம் நாடகத்துடன் நிறைவு பெறும். இப்பகுதியில் முத்தாளம்மன் கோயில்திருவிழா நடக்க உள்ளதால் இந்தாண்டு 35 நாட்கள் மட்டும் நாடகம் நடத்தப்படுகிறது. முதல் நாள் வலையங்குளம் கிராம பொதுமக்கள், எங்களது திருமலை மெச்சினார் குடும்பத்தினர் செலவிலும், மற்ற நாட்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தினமும் ஒருவர் செலவிலும் நாடகம் நடத்தப்படுகிறது.கோயில் மரியாதை, நாடகக்கலையை அழியாமல் காப்பது, தமிழ் கலாசாரம், பாரம்பரியத்துக்கு பாதுகாப்பு என்பதற்காக தொடர்ந்து நாடகம் நடத்துகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை