மல்லிகை வாசனையா மது வாசனையா செல்லம்பட்டி விவசாயிகள் வேதனை
மதுரை : செல்லம்பட்டி எரவார்பட்டியில் புதிய மது கடை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கலெக்டர் சங்கீதாவிடம் செல்லம்பட்டி பகுதி மக்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர். விவசாயிகள் பாண்டி, ராமன், இளங்கோவன், அறிவழகன், ஜெயக்குமார், கருப்பசாமி, பெரியசாமி, சின்னத்தம்பி, வீரபாண்டி, வீருச்சாமி கூறியதாவது: உசிலம்பட்டி பகுதி மதுக்கடையை எரவார்பட்டிக்கு மாற்ற டாஸ்மாக் மண்டல மேலாளர் இடத்தை ஆய்வு செய்துள்ளார். விக்கிரமங்கலம், உத்தப்பநாயக்கனுார் பகுதி கிராமங்களில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செவ்வந்திபூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளோம். விவசாய கூலிகள் இங்கு அதிகம். 15 கி.மீ., துாரம் வரை மது கடைகளே இல்லாத நிலையில் புதிதாக கடை திறந்தால் விவசாயிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவர்.இங்கிருந்து தெற்காசியா முழுவதும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள், கூலியாட்கள் குடிக்கு அடிமையானால் பூக்கள் சாகுபடி அழியும். ரவுடிகளின் தொல்லை அதிகரித்து கிராமங்கள் அமைதியிழந்து விடும். இதுகுறித்து கலெக்டர் சங்கீதாவிடம் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம். பூக்கள் வாசனை வீசும் இப்பகுதியில் மது வாசனை வீசுவதை ஏற்கமுடியாது என்றனர்.