| ADDED : ஜூன் 12, 2024 06:19 AM
சிலைமான்: சிலைமான் அண்ணா நகர் பகுதியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பறை பல மாதங்களாக பூட்டிக் கிடப்பதால், யாருக்கும் பயனின்றி கிடப்பதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: இங்கு 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வழியில் பழநிக்கு திருவிழா செல்லும் பக்தர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வருவர். முதியவர்கள், குழந்தைகள், பெண்களுக்காக குறிப்பாக கட்டப்பட்ட இக்கழிப்பறை ஒராண்டு காலமாக பூட்டியே இருக்கிறது. இதனால் அதன் மேலே புதர் முளைத்து, செடிகள் படர்ந்து, மோசமான நிலையில் உள்ளது.பொதுமக்கள் இக்கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை நாடும் பரிதாப நிலையுள்ளது.அவர்களிடம் போதையில் ஆண்கள் ரகளையில் ஈடுபடுவதும், விஷப் பூச்சிகள் கடித்தும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். பொது இடங்களில் சிலர் அசுத்தம் செய்வதால் அப்பகுதி மிக மோசமாக உள்ளது.இக்கழிப்பறையை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.