உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 21 முதல் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி

ஜூன் 21 முதல் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி

மதுரை, : மதுரை மடீட்சியா ஹாலில் 'ஆயுஷ் 2024' எனும் 3 நாள் ஆயுர்வேதா, யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி பாரம்பரிய மருத்துவ கண்காட்சி ஜூன் 21ல் துவங்குகிறது. மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன், செயலாளர் கோடீஸ்வரன், துணைத்தலைவர் சந்திரசேகர், கண்காட்சி தலைவர் ராஜமுருகன், சித்தா டாக்டர் ஜெய வெங்கடேஷ் கூறியதாவது:மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம், லைசென்ஸ் வழங்கும் ஆணையத்தின் ஸ்டால்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.இந்திய மருத்துவ உற்பத்தியாளர்களின் 75 ஸ்டால்கள், பல்வேறு தலைப்புகளில் ஆயுஷ் நலவாழ்வு கருத்தரங்கு, மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் 300 அரிய வகை மூலிகைச்செடி கண்காட்சி இடம்பெறும். சித்தா, ஆயுர்வேத மூலிகைச் செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படும்.டில்லி தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பில் அஸ்வகந்தா மூலிகைச் செடியின் சாகுபடி, பயன்பாடு குறித்து ஜூன் 22, 23 ல் விவசாயிகள், தொழில்முனைவோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆயுஷ் துறை சார்ந்த கல்லுாரி மாணவர்களுக்கு போஸ்டர் போட்டி நடத்தப்படுகிறது. மூன்று நாட்களும் காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மருந்தும் இலவசம்.மடீட்சியா, தமிழ்நாடு ஆயுர்வேதா, சித்தா மற்றும் யுனானி மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஜூன் 23 காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மருந்து நிறுவனங்களின் வளர்ச்சி, லைசென்ஸ் பெறும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. மருந்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்கலாம், என்றனர்.இக்கண்காட்சி ஜூன் 23 வரை தினமும் காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது, அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி