உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்துக் கழக பி.எப்., நிதி முறைகேடு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துக் கழக பி.எப்., நிதி முறைகேடு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பி.எப்., தொகை, ஓய்வூதிய நிதி அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. நிதியை தவறாக கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதில் மேல்நடவடிக்கை மேற்கொள்வதற்காக எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்ளப்படுகிறார் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அரசு போக்குவரத்துக் கழகத்தில் கன்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சுப்புராஜ். இவர் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,), ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். பணப் பலன்களை வழங்க 202ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம், விருதுநகர் மண்டல பொதுமேலாளர் சிவலிங்கம், போக்குவரத்துக் கழக ஊழியர் ஓய்வூதிய நிதி அறக்கட்டளை நிர்வாகி பாமா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் சுப்புராஜ் மனு செய்தார்.நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.பொது மேலாளர் தரப்பு, 'மனுதாரருக்குரிய பணப்பலன்கள் ரூ.27 லட்சத்து 58 ஆயிரத்து 356 அரசிடமிருந்து நிதி உதவி கிடைத்ததும் விரைவில் வழங்கப்படும்,' என பதில் மனு தாக்கல் செய்தது.நீதிபதி: அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காதவரை, மனுதாரருக்குரிய தொகையை விடுவிக்கும் நிலையில் போக்குவரத்துக் கழக நிர்வாகம் இல்லை. விடுப்பு சம்பளம், பணிக்கொடையை வழங்க அரசின் நிதி உதவியை நாடுவதை புரிந்துகொள்ள முடிகிறது. பி.எப்.,தொகையை பொறுத்தவரையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தை விட சிறந்த திட்டம் இருப்பதாகக்கூறி, அச்சட்டத்திலிருந்து போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே விலக்கு கோரியது. இதன்படி இ.பி.எப்.,அமைப்பால் விலக்கு அளிக்கப்பட்டது.போக்குவரத்துக் கழக ஊழியர் ஓய்வூதிய நிதி அறக்கட்டளையை போக்குவரத்துக் கழக நிர்வாகம் உருவாக்கியது. அதில் பணியாளர்கள் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனால் பி.எப்., தொகையை வழங்க, அரசிடம் நிதி உதவி கோரும் கேள்வி எழவில்லை. சம்பந்தப்பட்ட ஊழியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகை, அறக்கட்டளையில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.நிதியை தவறாக கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. இதில் மேல்நடவடிக்கையை துவக்குவதற்காக மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டரை எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவு பிறப்பிக்கிறது. போக்குவரத்துக் கழகத்திடம் விசாரணைக்குப் பின் இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். விசாரணை செப்.30க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி