| ADDED : மே 27, 2024 06:33 AM
மதுரை,: காளவாசல் சந்திப்பில்உயர்மட்ட பாலம் அமைத்ததற்காக கீழ்ப்பகுதியிலுள்ள அகலமான பைபாஸ் ரோட்டில் தடுப்புகளால் வழியை மறைத்து போலீசாரே போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர்.மதுரை பைபாஸ் ரோட்டில் பழங்காநத்தம் பகுதியில் இருந்து பெத்தானியாபுரத்தைக் கடந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த உயர்மட்ட பாலத்தை பயன்படுத்திச் செல்கின்றன. ஆனால் பாலத்தின் கீழ் உள்ள பெத்தானியாபுரம் பகுதிக்கு புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் பைபாஸ் ரோட்டிலேயே சென்று சிக்னலுக்காக நிற்கும் போது குழப்பமடைகின்றனர். ஏனெனில் சிக்னலில் இருந்து இடதுபக்கம் முடக்குச்சாலைக்கும், வலது பக்கம்அரசரடிக்கும் மட்டுமே அனுமதிக்கின்றனர். நேர்பாதையில் பெத்தானியாபுரம் செல்லவிடாமல் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அரசரடியில் இருந்து வருவோருக்கு சிக்னல் கிடைத்ததும், 'பறந்து' வரும் வாகனங்களுடன் டூவீலர், ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் விதிமீறி திரும்பி இணைந்து செல்கின்றனர். இதனால் விபத்து நிகழ அதிக வாய்ப்புள்ளது. கனரக வாகனங்களோ வேறு வழியின்றி 'யு டர்ன்' அடித்து திரும்பி பாலத்தின் மேல் ஏறிச் செல்கின்றன. அதேபோல பெத்தானியாபுரம் - பழங்காநத்தம் செல்லும் பகுதியிலும் தடுப்பு அமைத்துஉள்ளதால் அங்கும் இதே குழப்பம் ஏற்படுகிறது.இவ்வளவு அகலமானபைபாஸ் ரோட்டில் நான்கு பக்கமும் வாகனங்கள் தடையற்று சென்றாலே போக்குவரத்து நெரிசல்ஏற்படாது. இதற்கு சந்திப்பில் அகலமான ரவுண்டானா அமைக்க வேண்டும். இதன் மூலம் தேவைப்படுவோர் மட்டும் பாலத்தை பயன்படுத்துவர். பழங்காநத்தம், செல்லுார், மாவட்ட கோர்ட் பகுதிகளில் சிக்னல் இல்லாத பெரிய ரவுண்டானாக்களில் போக்குவரத்து சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து தேவையின்றி தடுப்புகளை அமைத்து போலீசாரே நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இந்த காளவாசல் சிக்னலை போலீசார் முழுமையாக ஆய்வு செய்து நான்கு பக்கமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.