| ADDED : ஜூன் 14, 2024 05:14 AM
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 6 வயது சிறுவனுக்கு மூச்சுக்குழாயில் பிளாஸ்டிக் சிக்கியதை கண்டறிந்து அவசர மூச்சுக் குழாய் ஸ்கோபி சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.அருப்புக்கோட்டையை சேர்ந்த 6 வயது சிறுவன் மூச்சுத் திணறல், குரல் இழப்புடன் மதுரை வேலம்மாள் மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது மூச்சுப் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் பேசுவதில் சிரமம் ஏற்படுவது ஏன் என டாக்டர்கள் ஆலோசித்தனர். மூச்சுக்குழாயில் ஸ்கோபி மூலம் பரிசோதனை செய்த போது அங்கு ஒரு பிளாஸ்டிக் பொருள் இருந்ததை கண்டறிந்தனர். இதனால்தான் சுவாசிப்பதில் திணறல் இருப்பது தெரிந்தது.டாக்டர் ராஜசேகரன் தலைமையில் டாக்டர்கள் சஷிகாந்த் அனில்போல், ராஜவேல், நிதின் ராகவ், சஞ்சய், சிந்து குழுவினர், டாக்டர்கள் லாவண்யா கணேஷ் பிரபு தலைமையிலான மயக்க மருந்து குழு இணைந்து அவசர மூச்சுக்குழாயில் ஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குரல் நாண்களுக்குக் கீழ் பச்சை நிறத்தில் இருந்த கூர்மையான (விளையாடும் பொம்மையின் ஒரு பகுதி) பொருள் அகற்றப்பட்டது.டாக்டர் சஷிகாந்த் அனில்போல் கூறுகையில், குழந்தைகள் பொதுவாக சிறிய பொருட்களை விழுங்கி விடுவர். அது வயிற்று பகுதிக்குச் சென்றுவிடும். ஆனால் இச்சிறுவனுக்கு மூச்சுக் குழாயில் பிளாஸ்டிக் தங்கி விட்டது. அதிர்ஷ்டவசமாக சுவாசிக்க ஒரு குறுகிய இடம் இருந்தது. இல்லையென்றால் மூச்சுத்திணறல் பிரச்னை தீவிரமாக இருந்திருக்கும் என்றார். டாக்டர்கள் குழுவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.