கீழக்குயில்குடி சமணர் மலை வளர்ச்சி பணிக்கு ரூ.ஒரு கோடிப்பே; அடிப்படை வசதிகள் விரைவில் செய்யப்படும்
மதுரை; மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை கீழக்குயில்குடி சமணர் மலைப்பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்ய சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.கீழக்குயில்குடி தவிர மதுரையில் 17 சமணர் படுக்கைகள் மாநில தொல்லியல் துறையால் நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கீழக்குயில்குடி சமணர் மலை ஏறும் முன்பாக உள்ள ஆலமரங்களும் அருகில் உள்ள தெப்பக்குளம், கோயில் அனைத்தும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. சமணர் மலை உச்சிக்கு செல்வதற்கு கோயிலை ஒட்டி பக்கவாட்டில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் பின்பகுதியில் 30 அடி உயரத்தில் மலையை குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு செல்வதற்கு படிக்கட்டுகள் உண்டு. அந்தரத்தில் தொங்கி நிற்கும் மலையின் ஒருபகுதி வெளிப்புற சுவரில் தீர்த்தங்கரர் உருவம், படுக்கையின் மேற்பகுதி உட்புறத்தில் பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் மரங்களின் பின்னணியில் இந்த இடம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் தற்போது வரை எதுவும் இல்லை. இதை மேம்படுத்தும் வகையாக சுற்றுலாத்துறை ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அலுவலர் ராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், பொறியாளர் சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைப்பகுதிக்கு வர ரோடு நன்றாக உள்ளது. மலையின் துவக்கத்தில் இருந்து 200 மீட்டர் துாரம் வரையான ரோடு சீரமைக்கப்பட உள்ளது. சோலார் விளக்குகள் பொருத்தப்படும். நவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் யூனிட், இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும் என்றார்.காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஜோடியாக வருபவர்களை போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்.