உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 1 கடை; 4 வாடகை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் வினோத வசூல்!

1 கடை; 4 வாடகை: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் வினோத வசூல்!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஒரு கடைக்கு அனுமதி பெற்று 3, 4 கடைகளாக உட்பிரிவு செய்து சிலர் உள்வாடகை வசூலித்து விதிமீறியது தெரியவந்துள்ளது. அரசியல் பின்னணியில் இந்த முறைகேடு அரங்கேறியுள்ளதால் மாநகராட்சிக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இப்பஸ் ஸ்டாண்டில் 189 கடைகள் மாநகராட்சியால் டெண்டர் வெளியிடப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை டெண்டர் விடுக்கப்பட்டு 15 சதவீதம் வாடகை உயர்த்தப்படுகிறது. சில கடைகள் ஏலம் விடப்படாமலும் உள்ளன. தற்போது ஓட்டல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3 லட்சம் முதலும், கடைகளுக்கு அதன் அளவுக்கு ஏற்ப ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் வாடகை வசூலிக்கப்படுகிறது.சிலர் மாநகராட்சி ஒதுக்கிய கடையை மூன்று, நான்கு பிரிவுகளாக பிரித்து அதை உள்வாடகைக்கு விட்டு விதிமீறி வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, கமிஷனர் சித்ரா ஆகியோர் ஆய்விலும் தெரியவந்தது. மேலும் பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளிலும் கடைகளை நீட்டி வியாபாரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை விதிமீறல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு கடைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இடம் குறித்து மறுஅளவீடு செய்யவும் உத்தரவிட்டார். ஆனாலும் 'அரசியல்' காரணங்களால் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: உண்மையான வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தி வருகின்றனர். ஆனால் அரசியல் பின்புலத்தில் கடைகளை ஏலம் எடுத்த சிலர் தான் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு ரூ. பல லட்சங்கள் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதிக்கம் காரணமாக வேறு வழியின்றி மாநகராட்சி அலுவலர்கள் சிலரும் விதிமீறலுக்கு உடந்தையாகி விடுகின்றனர். மேயர், கலெக்டர், கமிஷனர் ஒன்றிணைந்து துவக்கிய இந்த நடவடிக்கை மூலம் 'உள்வாடகை' விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை