உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலமடை மேம்பாலத்தில் 1300 டன் லோடு ஏற்றி பைல்ஸ் சோதனை பிரமிடு போல் 9.5 மீ., உயரத்திற்கு அடுக்கப்பட்ட மணல் மூடைகள்

மேலமடை மேம்பாலத்தில் 1300 டன் லோடு ஏற்றி பைல்ஸ் சோதனை பிரமிடு போல் 9.5 மீ., உயரத்திற்கு அடுக்கப்பட்ட மணல் மூடைகள்

மதுரை: மதுரை - சிவகங்கை ரோடு மேலமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 1100 மீ., மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. 1300 டன் லோடு ஏற்றி 'பைல்ஸ்' சோதனை நடக்கிறது. இதற்காக 9.5 மீ., உயரம் மணல் மூடைகளை அடுக்கியுள்ளனர். இப்பாலம் ஆவின் பண்ணை அருகே துவங்கி மேலமடை சந்திப்பை தாண்டி அமைகிறது. வண்டியூர் கண்மாய் கரையையொட்டி பாலம் துவங்கும், முடியும் இடங்களில் உள்ள இருபக்க சுவர்களை தவிர்த்து 28 துாண்கள் அமைகின்றன. இந்த துாண்களை நிறுத்துவதற்காக அதனடியில் கான்கிரீட் மேடை அமைக்கப்படும். மேடையின் கீழ் 'பைல்கள்' எனப்படும் அமைப்பு பூமிக்குள் கீழ் நோக்கி அமைக்கப்படும். இதன் தாங்கு திறன் எவ்வளவு என்பதை அறிய நேற்று 'ஸ்டாட்டிக் பைல் லோடு டெஸ்ட்' என்ற சோதனை துவங்கியது.இதற்காக துாண் அமையும் பகுதியில் இரும்பு பிளாட்பார்ம் அமைத்துள்ளனர். ஒரு துாண் 400 டன் எடையை தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, 2.5 மடங்கு (1300 டன்) எடையுள்ள மணல் மூடைகளை 'பிரமிட்' போல அமைத்து பிரமிக்க வைத்துள்ளனர். அதன் உயரம் 9.5 மீட்டர். இரும்பு பிளாட்பாரத்தின் கீழ் 'ஜாக்கி'யை வைத்து மணல் மூடைகளின் மொத்த எடையையும் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கும்படி செய்கின்றனர். நேற்று துவங்கிய இப்பணியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் பார்வையிட்டனர். மணல் மூடை சோதனையை உதவி இயக்குனர் சாருமதி, உதவிப் பொறியாளர் காயத்ரி தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.இந்த அழுத்தத்தால் பூமிக்குள் புதைந்துள்ள 'பைல்'கள் எந்தளவு கீழே இறங்குகின்றன என்பதை அவர்கள் கணக்கிடுவர். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து மொத்த எடையயும் அழுத்துவர். அதன்பின் 24 மணி நேரம் அந்த 'லோடை' (சுமை) அப்படியே வைத்திருந்து கண்காணிப்பர். அதனை மாதிரியாகக் கொண்டு அனைத்து துாண்களின் 'பைல்'களும் இருக்கும் வகையில் துாண்களின் கட்டுமானம் இருக்கும்.இதேபோல சில நாட்களுக்கு முன் 'டைனமிக் லோடு டெஸ்ட்' என்ற சோதனை துாண்களில் நடத்தப்பட்டது. இதில் மிகப்பெரிய இரும்பு அமைப்பைக் கொண்டு பைல்கள் மீது வேகமாக மோதச் செய்து அதன் திறனை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. பாலப் பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !