உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 150 மி.மீ., மழை பெய்தும் காலியாக உள்ள கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயம்

150 மி.மீ., மழை பெய்தும் காலியாக உள்ள கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயம்

பேரையூர் ; பேரையூரில் அக்டோபரில் 150 மி.மீ.,க்கு மேல் மழை பெய்தும் நீர்வரத்தின்றி, கண்மாய்கள் வறண்டு போய் இருப்பதால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றுக்கு நீரை கொண்டு வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன. சில இடங்களில் துார்ந்து போய் உள்ளன. இதனால் மழை நீர் திசை மாறி சென்று வீணாகிறது.கண்மாய்கள் தொடர்ந்து வறண்டு உள்ளதால் விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது. வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வாரி சீரமைத்து தண்ணீர் வந்து சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆண்டுதோறும் விவசாயப் பரப்பு குறைவதை தடுக்க முடியாது. இத்தாலுகாவில் ஆறுகளோ அணைகளோ கிடையாது. ஐம்பது சதவீதத்திற்கும் மேலான நிலங்கள் கண்மாய் நீரால் பாசனம் பெறுகின்றன.கண்மாயில் நீர் தேங்கினால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான கிணறுகளில் நீர் சுரப்பு ஏற்பட்டு இறவை சாகுபடி நடைபெறும். நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களை பல ஆண்டுகளாக துார்வாராததால், இந்த அக்டோபரில் மட்டும் 150 மி.மீ.,க்கு மேல் மழை பெய்தும் பல கண்மாய்கள் இன்னும் வறண்டு கிடக்கின்றன.

குப்பை மேடாகும் கண்மாய்கள்

நீர்வரத்து இல்லாததால் ஊரையொட்டிய பல கண்மாய்கள் குப்பைத் தொட்டியாக, கழிவுநீர் தேங்கும் இடமாக மாறியுள்ளன. கண்மாய், கால்வாய்களில் விவசாயம் செய்வோர், சுயநலத்திற்காக நீர் தேங்காமல் செய்வதும், நீரின் போக்கை மாற்றி விடுவதுமாக செயல்படுகின்றனர். பல இடங்களில் 20 மீ., அகலமுள்ள கால்வாய் 2 மீ., ஆக சுருங்கிவிட்டது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக மாறி விட்டன. ஆழ்துளைகளில் நீர் சுரப்பு குறைந்து விட்டது.விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை விவசாயிகள் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. கால்வாய் புதர் மண்டியுள்ளதால் மழைநேரத்தில் தண்ணீர் செல்வதில்லை. கால்வாய், கண்மாய்களை முறையாக பராமரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், மண்மேவி, முட்புதர்களால் உருமாறி விட்டது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ