லிப்ட் கேட்டு பயணித்த 2 துாய்மை பணியாளர் பலி
தி-ருமங்கலம் : திருமங்கலம் நகராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளர்களாக இருந்தவர்கள் நாகரத்தினம், 50, ஈஸ்வரி, 40. நேற்று மதியம், 3:45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான நிலைய ரோட்டில் டூ- - வீலரில் வந்தவரிடம் 'லிப்ட்' கேட்டு சென்றனர்.அவர்கள் ஏறிச் சென்ற டூ - வீலர் 100 அடி கூட தாண்டாத நிலையில், பள்ளம் காரணமாக தடுமாறியதில், ஓட்டி வந்த நபர் இடது புறமாகவும், இரு பெண்களும் வலது புறமாகவும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கனரக லாரி ஏறியதில், இரு பெண்களும் தலை நசுங்கி பலியாயினர்.டூ - வீலர் ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். லாரி டிரைவர் திருச்சி துறையூர் ஜெயபிரகாஷ், 21, என்பவரும் தப்பி ஓடி விட்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்கான மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாததால், விபத்து நடந்த ரோட்டையே வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.இந்த ரோடு மேடு பள்ளமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளதால், தினமும் சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. நேற்று இந்த ரோடு, இருவர் உயிர்களை பலி வாங்கி விட்டது.