மரப்பொம்மை என்ற பெயரில் மதுரைக்கு வந்த 24 கிலோ கஞ்சா
மதுரை : மதுரைக்கு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து மரப்பொம்மை என்ற பெயரில் கூரியரில் 24 கிலோ கஞ்சா அனுப்பியவர், அதை வாங்க காத்திருந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை சிம்மக்கல் விக்கி என்பவருக்கு விசாகபட்டினத்தில் இருந்து ஜாஸ்வா என்பவர் மரப்பொம்மைகள் அடங்கிய மரப்பெட்டி பார்சல் அனுப்பினார். அந்த பார்சல் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள புரோபஷனல் கூரியர் தலைமை அலுவலகத்திற்கு வந்தது. முகவரியை உறுதி செய்ய விக்கியிடம் ஊழியர்கள் அலைபேசியில் பேசியபோது முன்னுக்கு பின் முரணாக முகவரியை கூறினார். சந்தேகமடைந்த ஊழியர்கள் எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் முன்னிலையில் பார்சலை திறந்து பார்த்தபோது, சாக்கு பையில் பாக்கெட்டுகளாக 24 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. ஜாஸ்வா பெயரில் கஞ்சா அனுப்பியவர் யார், விக்கி யார் என விசாரணை நடக்கிறது.ஆந்திராவில் இருந்து கஞ்சா உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. ரயில், பஸ், லாரி, கார் வழியாக கடத்தி வரும்போது போலீசாரிடம் சிக்குகின்றனர். இதை தவிர்க்க தற்போது கூரியரில் அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.