40 மாத தி.மு.க., ஆட்சியில் அலங்கோலம் * முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்
பேரையூர்: ''தமிழகத்தில் நாற்பது மாதங்களாக தி.மு.க., ஆட்சி என்ற பெயரில் அலங்கோலம் தான் நடக்கிறது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அக். 9 ல் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதற்காக இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் டி.குன்னத்துார் ஜெ., கோயிலில் பொதுக்குழு உறுப்பினர் பாவடியான் தலைமையில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: கடந்த 40 மாத தி.மு.க ஆட்சியில், ஆட்சி என்ற பெயரில் அலங்கோலம் தான் நடக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். பெற்றோர் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் நிறைவேற்றவில்லை. கல்விக் கடனை, நீட் தேர்வை இன்னும் ரத்து செய்யவில்லை.நுாறு நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலையாக உயர்த்துவோம் என்று கூறியதையும் செய்யவில்லை. வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும் என்று பார்த்தால், அவரது மகனை துணை முதலமைச்சர் ஆக்கிய அறிவிப்புதான் வருகிறது. இது இளைஞர்களுக்கு இடியாக உள்ளது என்றார். ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் செய்தார்.