100 வார்டுகளில் 45 ஆயிரம் தெரு நாய்கள் நேற்று 2 பள்ளி மாணவர்களை கடித்தன
மதுரை: மதுரை நகரில் தெரு நாய்கள் விரட்டி கடித்ததில், பள்ளிக்குச் சென்ற 2 மாணவர்கள் காயமடைந்தனர். மாநகராட்சி 45வது வார்டு காமராஜபுரம் குமரன் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 7 வயது மாணவி, நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது தெருநாய் விரட்டி கடித்ததில் முகம், கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதேபோல் நாகமலைப் புதுக்கோட்டையில் 8 வயது மாணவனையும் தெரு நாய் ஒன்று துரத்தி கடித்தது. இதில் மாணவன் கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் சமீபகாலமாக தெரு நாய்கள் அதிகரித்து வருகின்றன. 'நாய் ஆர்வலர்கள் ரோடுகளில் அவற்றுக்கு உணவு வைக்கக்கூடாது' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பல இடங்களில் ரோட்டோரத்தில் உணவு வைக்கின்றனர். அதை சாப்பிடுவதற்கு நாய்களுக்குள் சண்டை ஏற்படுவதால் மக்கள் அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. குடியிருப்புகள், தெருக்களில் முதியவர், குழந்தைகள் நடமாட முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், '100 வார்டுகளிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் ஆக்ரோஷத்தன்மை கொண்டவை குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அவையால் கடித்த நபர்கள் குறித்து விபரம் சேகரிக்கப்படுகிறது. அவர்களில் ரேபிஸ் பாதிப்பு உள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.