உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழகத்தில் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடங்கள் காலி; கல்வி அமைச்சர் ஆய்வு கூட்டம் பலன் தருமா

தமிழகத்தில் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடங்கள் காலி; கல்வி அமைச்சர் ஆய்வு கூட்டம் பலன் தருமா

மதுரை: கல்வித்துறையில் 50 சதவீதம் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அமைச்சர் மகேஷ் தலைமையில் நாளை (நவ., 4) அனைத்து சி.இ.ஓ.,க்கள் ஆய்வுக்கூட்டம் பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 'கல்வியும், சுகாதாரமும் இரண்டு கண்கள்' என கூறி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் நான்கரையாண்டுகளில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உட்பட கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் 'புலம்பல்' அதிகரித்துள்ளது என சங்கங்கள் விமர்சிக்கின்றன. இதற்கு காரணம் துறை அமைச்சர் மகேஷ். இத்துறையில் மாவட்ட அளவில் சி.இ.ஓ., பணியிடம் என்பது மிக முக்கியமானது. ஓராண்டாக கிருஷ்ணகிரியிலும், ஆறு மாதங்களுக்கு மேலாக தேனி, திருப்பூர், தஞ்சை, மயிலாடுதுறையிலும், 4 மாதங்களுக்கும் மேலாக நாகபட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலுார் உட்பட மாநில அளவில் 50 சதவீதம் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. சி.இ.ஓ.க்களை நிரப்ப அமைச்சர், அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இம்மாவட்டங்களில் சி.இ.ஓ.,க் கள் பணியை அங்குள்ள டி.இ.ஓ.,க்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். அவர்கள் பணிச்சுமையில் சிக்கி மனஉளைச்சலில் உள்ளனர். இதன் விளைவு மாணவர்கள் கற்றல் அடைவுத் திறன் (சிலாஸ்) தேர்வில் எதிரொலித்துள்ளது. 4 மாதங்களுக்கு பின் கூட்டம் இந்நிலையில் நான்கு மாதங்களாக நடத்தாத அமைச்சர் தலைமையிலான அனைத்து சி.இ.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நாளை (நவ., 4) நடக்கிறது. அமைச்சர், செயலாளர், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். பள்ளிச் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் வழங்கல், சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களின் பள்ளிப்பார்வை உட்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடக்கின்றன. சி.இ.ஓ.,க்கள் இல்லாததால் மாவட்டங்களில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் டி.இ.ஓ.,க்கள் உரிய பதில்களை தெரிவிப்பார்களா. ஆய்வுக் கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மொத்தமுள்ள 38 ல் 18 மாவட்டங்களில் முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர், மாணவர், அரசு பள்ளிகள் நலன் சார்ந்த எந்த கோரிக்கைகளையும் அதிகாரிகள் காதுகொடுத்து கேட்பதில்லை. ஆளுங்கட்சியை ஆஹா... ஓஹோ... என புகழும் சில குறிப்பிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் தான் அமைச்சரை சந்திக்க முடிகிறது. ரூ. பல கோடிகளில் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் சி.இ.ஓ.,களுக்கு முக்கிய பங்கு உள்ளது. 50 சதவீத சி.இ.ஓ., பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருப்பது அமைச்சர் கவனத்திற்கு செல்லவில்லையா. இதுகுறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கையை சுட்டிக்காட்டி 'தமிழகத்தில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து கல்வித்துறையே மிகவும் பின்தங்கியுள்ளது' என பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் வேதனை தெரிவித்தார். சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அமைச்சர், அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது நாளைய ஆய்வுக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ