ரேஷனில் அரிசி பெற ரேகை82.02 சதவீதம் பேர் பதிவு மேலுார், உசிலம்பட்டி தாலுகாக்களில் குறைவு
மதுரை: மதுரை மாவட்டத்தில் அரிசி கார்டுதாரர்கள் 82.02 சதவீதம் அளவுக்கு கைரேகை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாதோருக்கான அரிசி ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ரேஷனில் அரிசிபெறுவோர் என்.பி.எச்.எச்., எனும் முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள், பி.எச்.எச்., எனும் முன்னுரிமை கார்டுதாரர்கள், ஏ.ஏ.ஒய்., எனும் அந்தியோதயா திட்டத்தில் அரிசி பெறுவோர் என உள்ளனர்.இதில் என்.பி.எச்.எச்., கார்டு தவிர, மற்ற 2 கார்டுகளுக்கும் மத்திய அரசு அரிசி வழங்குகிறது. இதில் பி.எச்.எச்., கார்டுக்கு ஒரு நபருக்கு (ஒரு யூனிட்) 5 கிலோ வீதமும், ஏ.ஒய்.ஒய்., கார்டுக்கு வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது.பலர் முறைகேடாக பெறுவதால் அரிசி வீணாவதாக கருதிய மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதுவரை அரிசி பெற குடும்பத் தலைவரே கைரேகை வைத்தனர். பி.எச்.எச்., மற்றும் ஏ.ஒய்.ஒய்., கார்டுதாரர் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை வைக்காவிட்டால் அரிசி ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். நேற்றுடன் கெடு முடிந்தது.மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 338 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் பி.எச்.எச்., கார்டுகள் 8 லட்சத்து 77 ஆயிரத்து 317 உள்ளன. இதில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 833 பேர் பயன்பெறுகின்றனர். இதேபோல ஏ.ஒய்.ஒய்., கார்டுகள் 58 ஆயிரத்து 356 உள்ளன. இதில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 966 பேர் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் சராசரியாக 82.02 சதவீதம் பேர்தான் கைரேகையை பதிவு செய்துள்ளனர்.இதில் மேலுார், உசிலம்பட்டி தாலுகாக்களில் சராசரியாக 79 சதவீதம் என்ற அளவில்தான் பதிவு உள்ளது. மேலுார் தாலுகாவில் பலர் வெளிநாடுகளிலும், உசிலம்பட்டி தாலுகாவில் பலர் வெளிமாநிலங்களிலும் பணிநிமித்தமாக உள்ளதால் இப்பகுதியில் குறைந்தளவு பதிவு உள்ளது.