அடிப்படை வசதி இல்லாத மயானம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைக்கட்டி ஆதிதிராவிடர் மயானத்தில் தண்ணீர் உட்பட அடிப்படை வசதியில்லாததால், இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பூச்சம்பட்டி ரோட்டில் கருப்பண்ணன் கண்மாய் ஓடை அருகே மயானம் உள்ளது. இங்கு 10 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட எரியூட்டு மேடை, காத்திருப்போர் கூடம் சேதமடைந்துள்ளது. மின்விளக்குகள் இல்லை. மயானத்திற்கு செல்லும் பாதை புதர் மண்டி கிடப்பதால், இறந்தோர் உடலை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. தண்ணீர் வசதி இல்லாததால், அதனைத் தேடி அருகில் உள்ள தோட்டங்களுக்கு அலைந்து திரிகின்றனர். அப்பகுதி சந்திர போஸ் கூறியதாவது: மயானத்தில் அமைத்துள்ள மின்சார மோட்டார் பழுதாகி 3 மாதங்களாகிறது. சேதமடைந்துள்ள அடிகுழாயை பயன்படுத்த முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் குடங்களுடன், ஓடைகளை கடந்து அலைந்து திரிவதற்கு கஷ்டமாக உள்ளது என்றார்.