பயன்பாடின்றி வீணாகும் உடற்பயிற்சி கூடம்
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் மாணிக்கம்பட்டியில் ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் பராமரிப்பு இன்றி உபகரணங்கள் மாயமாகி வருகிறது. இங்குள்ள ஊராட்சி அலுவலகம் எதிரே 6 ஆண்டுகளுக்கு முன் அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், நடைபயிற்சி தளங்கள், சுகாதார வளாகம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. தற்போது உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள நவீன கருவிகள் மாயமாகியும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. கூடத்தின் கதவு எந்நேரமும் திறந்து கிடக்கிறது. பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி துருப்பிடித்து வருவதால் நிதி வீணாகிறது. இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் 'பார்', கஞ்சா புகைக்கும் பகுதியாக பயன்படுத்துகின்றனர். இங்கு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.