உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெளிநாட்டு ஹாக்கி வீரர்களுக்கு அதிதீவிர வரவேற்பு உள்நாட்டு ரசிகர்களுக்கு சகதியில் காலரி, கழிப்பறை

வெளிநாட்டு ஹாக்கி வீரர்களுக்கு அதிதீவிர வரவேற்பு உள்நாட்டு ரசிகர்களுக்கு சகதியில் காலரி, கழிப்பறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை,:மதுரையில் நவ. 28 ல் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைக்கான போட்டி துவங்க உள்ள நிலையில், பார்வையாளர்களுக்கான தற்காலிக காலரி செல்லும் பாதை சேறும் சகதியுமாகவும், காலரியின் அடியில் தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது.மழை பெய்தாலே ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடும். சர்வதேச ஹாக்கி அரங்கு அமைப்பதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டியதாலும், கனரக வாகனங்கள் வந்து சென்றதாலும் முன்புற நுழைவாயிலில் இருந்து ஹாக்கி அரங்கு செல்லும் ரோடு முழுமையாக சேதமடைந்துள்ளது. நடந்து செல்லும் போது அரையடி ஆழத்திற்கு கால் புதையும் வகையில் மோசமாக உள்ளது. இதைத்தாண்டி தான் பயிற்சி ஆட்டம் நடக்கும் மினி ஹாக்கி அரங்கிற்கு செல்ல வேண்டும். இந்த சகதியில் கால் வைத்து அரங்கின் புல்தரையில் கால் வைத்தால் தரை முழுவதும் சேறாகி விடும்.1200 பேர் அமரும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காலரியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. காலரி செல்வதற்கு முன்பாக சேறு, சகதி, தண்ணீரில் காலை வைத்துத் தான் செல்ல வேண்டும். ஒருபக்கம் சர்வதேச தரத்தில் ஹாக்கி அரங்கு, பார்வையாளர் காலரி, வி.ஐ.பி., காலரி, முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கு, வெளிநாட்டு வீரர்கள் அமர்வதற்கான வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அந்த வீரர்கள் விளையாடும் போட்டிகளை ரசிக்க வரும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

கழிப்பறைகள் குறைவு

1200 பேர் அமரும் தற்காலிக காலரிக்கு செல்வதற்கு என மைதானத்தின் வெளிப்பக்க நுழைவாயில் வழியாக தனிப்பாதை உள்ளது. இதன் அருகிலேயே ஆண், பெண்களுக்கென தலா 5 மொபைல் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 1200 பேருக்கு 10 கழிப்பறைகள் போதாது என்பதால் பார்வையாளர்கள் மைதானத்தின் உட்புறமுள்ள நிரந்தர கழிப்பிடங்களை பயன்படுத்துவதற்கு செல்ல வேண்டும். காலரியில் இருந்து கழிப்பறை செல்வதற்கான பாதை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.ஒருபக்கம் வண்ணமயமான உலகமும் மறுபக்கம் வறுமையை எடுத்துரைக்கும் அவலமும் இருப்பது போல ரேஸ்கோர்ஸ் மைதானம் காட்சியளிக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் காலரியின் பின்பக்கம் வந்து பார்த்தால் தவறான கணிப்பை ஏற்படுத்தும். போட்டி துவங்குவதற்கு இருநாட்களே உள்ள நிலையில் ஹாக்கி அரங்கை சுற்றியுள்ள அனைத்து வழிகளையும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

தேசியக் கொடிகளுக்கு தனிக்கம்பங்கள்

மதுரை, சென்னையில் நவ. 28 முதல் டிச. 12 வரை நடக்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று மதியம் ஆஸ்திரியா, ஸ்பெயின் நாட்டு ஹாக்கி அணியினர் மதுரை வந்தனர். தற்போது வரை 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதுரை ஹாக்கி அரங்கில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவ. 28 ல் போட்டிக்கான துவக்கவிழாவின் போது 24 நாட்டு தேசியக் கொடிகள், இந்திய தேசியக் கொடியை ஏற்றும் வகையில் ஹாக்கி அரங்கின் பக்கவாட்டில் இருபக்கமும் தலா 13 இரும்பு பைப்கள் கான்கிரீட் வைத்து நிறுத்தப்பட்டுள்ளன. செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் நிரந்தர காலரி செல்வதற்கு தனி வழியும், தனி படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ