| ADDED : பிப் 22, 2024 06:32 AM
மதுரை: 'தி.மு.க., அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் மதுரைக்கு எதுவுமே செய்யவில்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், ஆட்சிக்கு வந்த போதும் மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால் அறிவிப்போடு சரி, எந்த திட்டமும் வந்த மாதிரி தெரியவில்லை. மதுரைக்கு ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பணியும் தொடங்கவில்லை.ஜெயலலிதா ஆட்சியில் மதுரை மாவட்ட மக்களுக்கு தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1292 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி சுணக்கத்துடன் நடந்து வருகிறது. நெல்பேட்டையில் இருந்து அவனியாபுரம் விமான நிலையம் செல்ல உயர்மட்ட மேம்பாலம் அறிவித்தார்கள். அதற்கு நிதி ஒதுக்கவில்லை. அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. தி.மு.க., அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் கானல் நீராகத்தான் உள்ளது. மதுரை சிறையை மாநகராட்சிக்கு வெளியே கொண்டு செல்ல இதுவரை முயற்சி எடுக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. மாநகராட்சி வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர் வளர்ச்சிக் குழுவை அமைத்தார்கள். அந்த குழு இருக்குதா எனத் தெரியவில்லை.மதுரை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கத்திற்காக 'அண்டர் பாஸ்' அமைக்கும் திட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பாடு செய்தோம். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அறிவித்தார்கள். அதற்கு பூர்வாங்க பணி நடக்கவில்லை, நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. இவ்வாறு கூறினார்.அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ். சரவணன், டாக்டர் சரவணன், மாணிக்கம், ஐ.டி., தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.