சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிக்கு இப்போதே தயாராகும் ஐ.டி., விங்க்
மதுரை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க., தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க., ஆட்சி குறைகளை 'டிரெண்ட்' ஆக்க அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு(ஐ.டி.) உத்தரவிட்டுள்ள பொதுச்செயலாளர் பழனிசாமி, நேரடியாக ஐ.டி., விங்க் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். அ.தி.மு.க., ஓட்டு வங்கி கடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது 20.46 சதவீதமாக குறைந்துள்ளது. அ.தி.மு.க., உட்கட்சி பூசலும் ஒரு காரணம். 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க., 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. 'அ.தி.மு.க., வின் பலமே தொண்டர்கள் தான். அவர்களை தக்க வைக்க பூத் அளவில் களப்பணியாற்ற வேண்டும்' என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ள பழனிசாமி, தி.மு.க., அரசின் குறைகளை 'டிரெண்ட்' ஆக்கி மக்களிடம் இப்போதே தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில் ஐ.டி., விங்க்கிற்கு 'எனர்ஜி' கொடுத்துள்ளார். 'ஐ.டி., விங்க்கிற்கு கட்சி தலைமை துணை நிற்கும். கட்சி வெற்றிக்கு துாணாக இருந்து பணிபுரிய பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து தி.மு.க., அரசின் செயல்பாடுகளை உடனுக்குடன் விமர்சித்து மக்களின் கவனத்திற்கு ஐ.டி., விங்க் கொண்டு செல்கிறது. இதற்காக இப்பிரிவின் மாநில செயலாளர் ராஜ்சத்யன் தலைமையிலான குழு மீம்ஸ் வீடியோக்கள், போஸ்டர்கள், வாய்ஸ் ஓவர் வீடியோக்களை மக்கள் ரசிக்கும்படி காமெடியாக 'அப்டேட்' செய்து ஈர்த்து வருகிறது. நமது நிருபரிடம் ராஜ்சத்யன் கூறியதாவது: அ.தி.மு.க., நடத்தும் போராட்டங்களை பேசும் பொருளாக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், பழனிசாமி நேரடி கண்காணிப்பில் ஐ.டி., விங்க் செயல்படுகிறது.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கட்சித் தலைமை மட்டுமல்ல, தொண்டர்களே நேரடியாக சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம் இப்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் மக்களின் கவனத்தை அ.தி.மு.க., பக்கம் திருப்ப பல்வேறு யுக்திகளை கையாள உள்ளோம் என்றார்.