உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சுறுசுறு பொறியியல்; சோம்பல் வருவாய் மாநகராட்சி யு.ஜி.டி., சிறப்பு முகாமில் சொதப்பல்

 சுறுசுறு பொறியியல்; சோம்பல் வருவாய் மாநகராட்சி யு.ஜி.டி., சிறப்பு முகாமில் சொதப்பல்

மதுரை: மதுரை மாநகராட்சியில் புதிய பாதாளச் சாக்கடை (யு.ஜி.டி.,) இணைப்பு சிறப்பு முகாமில் போதிய எண்ணிக்கையில் வருவாய் பிரிவு அலுவலர்கள் நியமிக்கப்படாததால் மக்கள் நீண்டநேரம் காத்திருந்து திரும்பி செல்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன்மூலம் 'விண்ணப்பம் வழங்கிய அன்றே இணைப்பு உத்தரவு பெறலாம்' என்ற முகாமின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. மண்டலம் 1க்கு உட்பட்ட 16 வார்டுகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்படவுள்ள நிலையில் 6 ஆயிரம் வரையே வழங்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளியன்று முகாம் நடத்தி இணைப்பு வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. புதனன்று ஆனையூர் வார்டு முகாமில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளில் பொறியியல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இணைப்பு கட்டணம், டெபாசிட் தொகை, வரி நிலுவைகளை வசூலிக்க வருவாய் பிரிவு சார்பில் ஒரு கவுன்டர் மட்டுமே அமைக்கப்பட்டது. பணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் பலர் திரும்பி சென்றனர். அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய இணைப்புக்கான கட்டணம், டெபாசிட் தொகை என ரூ.5625ம் செலுத்த வேண்டும். இப்பணிகளை கவனிக்க போதிய எண்ணிக்கையில் வருவாய் பிரிவு அலுவலர்கள் இல்லை. காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் முகாமில் 50 பேருக்கு மட்டுமே உத்தரவு வழங்க முடிகிறது. ஆனையூர் முகாமில் மக்கள் வெறுத்துப்போய் பாதியிலேயே திரும்பியதால் நேற்று (டிச.19) நடந்த வண்டியூர் முகாமில், பணம் வசூலிக்க கூடுதலாக ஒரு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அது போதியதாக இல்லை. இன்னும் 40 ஆயிரத்திற்கும் மேல் இணைப்பு வழங்க வேண்டியுள்ளதால் சிறப்பு முகாமில் குறைந்தது 4 கவுன்டர்களையாவது ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை