ரீல்ஸ்க்கு லைக்ஸ் கிடைக்கலைனா ஸ்ட்ரெஸ் ஆகிறதா கண்டிப்பாக மனநல கவுன்சிலிங் தேவை
மதுரை : சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ் வீடியோக்களுக்கு லைக்ஸ்' கிடைக்கவில்லை என்றால் மன அழுத்தத்திற்கு ஆளாவோர் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே கவுன்சிலிங் அளித்து குணப்படுத்தினால் மனநோயாக மாறுவதில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி.அலைபேசி மூலம் தொடர்ந்து 'ரீல்ஸ், ஷார்ட்ஸ்' வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தாங்களே வீடியோ தயாரித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடும் போது 'லைக்ஸ்' கிடைக்காவிட்டாலோ குறைந்தளவு 'லைக்ஸ்' கிடைத்தாலோ மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். திடீர் திடீரென கோபப்படுதல், தற்கொலை எண்ணம் வருதல் போன்ற பிரச்னைகளுக்காக கவுன்சிலிங் வருவோரிடம் மனம் விட்டு பேசும் போது தான் இப்பிரச்னையின் தீவிரம் தெரிகிறது என்கிறார் கீதாஞ்சலி.அவர் கூறியதாவது:தொடர்ந்து இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்று யாரையும் மனநல சிகிச்சைக்கு அழைத்து வருவதில்லை. அவர்களின் இயல்பான நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தான் சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர். 25 வயது இளைஞர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு மனச்சோர்வு அடைந்ததும் 60 வயது முதியவர் தனது வீடியோக்களுக்கு 'லைக்ஸ்' கிடைக்கவில்லை என்று மன அழுத்தத்திற்கு ஆளானதும் கவுன்சிலிங் செய்யும் போது தான் தெரியவந்தது. மனச்சோர்வு என்பது பொதுவான விஷயம் தான். கட்டுப்பாடற்று எதையும் யோசிக்காமல் ஒரு விஷயத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் அதற்கு அடிமையாகின்றனர். அதேபோல ஒரே நாளில் 'கவுன்சிலிங்' மூலம் சிகிச்சை அளித்து அவர்களை மீட்க முடியாது. தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் ஒருசிலருக்கு மருந்துகளும் தேவைப்படும். ஒருபக்கம் கூட வாசிக்க முடியாது
யுடியூப், இன்ஸ்டாகிராம் ஷார்ட், வீடியோக்கள் அதிகபட்சம் 10 வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரையே உள்ளது. இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் போது இளையோரின் மூளையின் செயல்படும் திறன் குறைகிறது.பெரிய விஷயங்களை கவனிக்க முடியாமல் போகிறது.மாணவர்களால் புத்தகத்தின் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படித்து மனப்பாடம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் படிப்பின் மீது நாட்டம் குறைந்து படிப்பே சுமையாக மாறிவிடும் வாய்ப்புள்ளது.குழந்தைகளுக்கு 'டிவி' நிகழ்ச்சி அல்லது அலைபேசியில் உள்ள வீடியோக்களை காண்பித்தவாறே சோறுாட்டும் போது குழந்தைக்கும் தாய்க்குமான பந்தம் குறைகிறது. 'டிவி' அல்லது அலைபேசி மீது தான் அதிக பாசம் ஏற்படுகிறது.குழந்தை வளர்ப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அலைபேசி, 'டிவி'யிடம் இருந்து குழந்தைகளை விலக்கி வைத்தால் தான் குடும்பம், சமுதாயத்துடன் இணக்கமான உறவை மேம்படுத்த முடியும்.பிள்ளைகள் பேசாமல் அலைபேசிக்குள் முடங்கி கிடப்பதை பெற்றோர் கண்டு கொள்ளாமல் விட்டால் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்றார்.