கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுக்கும் அதிகாரிகள்
மதுரை : தமிழக போலீஸ் துறையில் நிர்வாக குளறுபடியால், சில மாத இடைவெளியில் பணியில் சேர்ந்த சில எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. கோர்ட் உத்தரவிட்ட பிறகும்கூட பதவி உயர்வு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 20 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., 30 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே உள்ளதாக பதவி உயர்வு கிடைக்காதவர்கள் புலம்புகின்றனர். உதாரணமாக 1997 ல் போலீஸ் பணியில் சேர்ந்த பலருக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கோர்ட்டில் சென்று முறையிட்டும், புலம்பியும் கிடைக்கவில்லை. எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: நிர்வாக குளறுபடி காரணமாக போலீஸ் எஸ்.ஐ.,யாக தாமதமாக பணியில் சிலர் சேர்க்கப்பட்டோம். எங்கள் பேட்சை சேர்ந்தவர்களில் பலர் தற்போது இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றுவிட்டனர். சிலர் பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் 'சீனியாரிட்டி' அடிப்படையில் எங்களையும் சேர்க்க வேண்டும் என மனு கொடுத்தோம். அதிகாரிகள் ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று அனுமதி பெற்றோம். ஆனால் யார் வழக்கு தொடர்ந்து அனுமதிபெற்றார்களோ அவருக்கு மட்டுமே கோர்ட் உத்தரவு பொருந்தும் எனக்கூறி அதிகாரிகள் பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இது கோர்ட் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது. இதுகுறித்து கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம். கோர்ட் உத்தரவு என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே. இல்லாதபட்சத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றால் போலீஸ் நிர்வாக பணிகளில் குளறுபடி ஏற்படும். தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும். வழக்குகளை முறையாக ஆராய்ந்து விசாரித்து கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வதால் என்ன பலன். இப்படி மேல் முறையீடு என்று 10, 15 ஆண்டுகள் கடந்து அதன் பலனை அனுபவிக்காமலேயே ஓய்வு பெறும் நிலைக்கு செல்கிறோம். ஏற்கனவே கோர்ட்களில் வழக்குகள் தேங்கி வரும் நிலையில் இது போன்ற பணி உயர்வு தொடர்பான வழக்குகளால் கோர்ட்டின் பணி சுமையும் அதிகரிக்கிறது. அதிகாரிகளிடம் முறையிடும்போதே அதிகாரிகளே அவற்றை ஆராய்ந்து பார்த்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நீதிமன்றம் செல்வதற்கான அவசியம் ஏற்படுவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இதை கருத்திற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றனர்.