UPDATED : நவ 30, 2026 12:00 AM | ADDED : நவ 29, 2026 11:12 PM
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஜாமின் மனுக்களை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சி.பி.ஐ., விசாரணை முடிந்து போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கூடுதலாக மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உட்பட மேலும் 4 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சண்முகசுந்தரம், ரமேஷ்குமார் ஆகியோர் ஜாமின் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.தாமோதரன் இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.