உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டும் போது தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சம்மேளனம் கேள்வி

பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டும் போது தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சம்மேளனம் கேள்வி

மதுரை: ''பொதுத்துறை வங்கிகளை குறைப்பது, தனியார் மயமாக்குவது என்ற சிந்தனையில் இருந்து மத்திய அரசு விடுபட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டும் போது தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன,'' என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் அருணாச்சலம் கேள்வி எழுப்பினார். மதுரையில் நடந்த வங்கி ஊழியர் சங்க கூட்டத்திற்கு அகில இந்திய பொது செயலாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் குமரன், டேவிட், காளிதாஸ் ஏற்பாடுகளை செய்தனர். சம்மேளன பொது செயலாளர் அருணாச்சலம் பேசியதாவது: 'அவுட்சோர்சிங்' முறையை கைவிட்டு பொதுத்துறை வங்கிகளில் லட்சக்கணக்கில் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். சரியான எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தால் தான் வாடிக்கையாளர்களுக்கான சேவை விரைவாக கிடைக்கும். துாய்மை பணியாளர்கள் கூட இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. 'அப்ரண்டிஸ்' சட்டம் 1961ல் இருந்து இந்தியாவில் இருந்தாலும் அதன் நோக்கம் கற்றுக் கொள்ளும் முறை தான். 'அப்ரண்டிஸ்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை நியமித்து, வேலை வாய்ப்பை உருவாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். தனியார்மயம் வேண்டாம் பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டும் போது தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. பொதுத்துறை வங்கிகளாக இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்யக்கூடியதாக இருக்கும். இரண்டு பொதுத்துறை வங்கிகளை முழுமையாக தனியாரிடம் கொடுக்கலாம் என பார்லிமென்டில் 2022 ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை ரத்துசெய்ய வேண்டும். ஏற்கனவே இருந்த 21 பொதுத்துறை வங்கிகளை இணைத்ததன் மூலம் 12 வங்கிகளாக குறைக்கப்பட்டு விட்டது. பெரிய நிறுவனங்களின் தொழில் அபிவிருத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ., வங்கியில் எல்.ஐ.சி., மற்றும் மத்திய அரசின் 97 சதவீத பங்கு உள்ளது. இதையும் தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கியின் 2100 கிளைகளின் 11ஆயிரம் நிரந்தர அலுவலர்கள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் 16ஆயிரம் பேர் ஆக., 11ல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். வராக்கடனை வசூலிப்பதற்கு பதிலாக சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. கிராம மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஆர்.ஆர்.பி., எனப்படும் மண்டல கிராமிய வங்கிகளின் நோக்கத்தை சிதைத்து அதன் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ளது. எல்லாவற்றிலும் தனியார்மயம் என்ற சிந்தனையில் இருந்து மத்திய அரசு விடுபட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை