கடும் அதிருப்தியில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர்கள்
மதுரை : சென்னையில் நடந்த பா.ஜ., மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர்களை புறக்கணித்ததால் அதிருப்தியில் உள்ளனர். தமிழக பா.ஜ.,வில் நிர்வாக வசதிக்காக 67 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்தது. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் இதுபோன்ற கூட்டங்களில் மாவட்ட தலைவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்ட பார்வையாளர்கள், பெருங்கோட்ட நிர்வாகிகள், மாநில அளவில் உள்ள பல்வேறு அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட பலரும் பங்கேற்பர். மாவட்ட பார்வையாளர்கள் முன்னாள் மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள். நேற்று முன்தினம் நடந்த இந்த கூட்டத்தில் பார்வையாளர்களை அழைக்காமல் முற்றிலும் புறக்கணித்து விட்டதாக வேதனை தெரிவித்தனர். இவர்களில் 10 பேர் வரை மீண்டும் மாவட்ட தலைவர்களாக உள்ளனர். அவர்கள் தவிர மற்றவர்கள் பங்கேற்கவில்லை. அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது ஒருமுறை இதேபோல புறக்கணித்தனர். அதன்பின் விமர்சனம் எழுந்ததால் மீண்டும் நடந்த கூட்டங்களில் அவர்களை பங்கேற்க செய்தனர். தற்போது நயினார் நாகேந்திரன் தலைவரான பிறகும் பார்வையாளர்களை புறக்கணிப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது. தேசிய அளவில் இதுபோன்ற கட்டமைப்புடன்தான் கட்சி செயல்படுகிறது. மாநில நிர்வாகத்திற்கே மாநில பார்வையாளர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது முன்னாள் மாவட்ட தலைவர்களான இவர்களின் அனுபவங்களை பயன்படுத்தாமல் புறக்கணிப்பது ஏனென்று தெரிய வில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.