மத்திய அமைச்சரிடம் பா.ஜ., வலியுறுத்தல்
மதுரை : வங்கிகளில் நீண்ட காலம் பணியாற்றும் வழக்கறிஞர்கள், பொறியாளர் குழுவினரை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் மனு அளித்துள்ளார்.அவரது மனு: தேசிய வங்கிகளில் வீட்டுக்கடன், அடமான கடன் விண்ணப்பங்களை வங்கியின் வழக்கறிஞர், பொறியாளர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவர். சொத்தின் மதிப்பை ஆய்வு செய்து வங்கிக்கு அனுப்பும் பரிந்துரையில் கடன் நிர்ணயிக்கப்படுகிறது.தற்போது வங்கிக்குழுவில் இடம்பெற்றிருக்கும் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் பல ஆண்டுகளாக அதே வங்கிக் குழுவில் இருப்பதால் கடன் விவகாரத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அக்குழுக்களை கூண்டோடு மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும். இக்குழுவினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் இவர்களுக்கு பணம் கொடுத்தால்தான் கடன் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. உண்மையில் தேவைப்படுவோருக்கு கிடைப்பதில்லை. புதிய குழுவை தகுதித்தேர்வு நடத்தி நியமிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.