நாள் பார்த்து பொருள் வாங்குங்க... விழிப்புணர்வு கூட்டத்தில் அட்வைஸ்
மதுரை: மதுரை மீனாட்சி மகளிர் கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான நுகர்வோர் திருவிழா நடந்தது.கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்து பேசியதாவது:பொருளின் தரம், எடையளவு, கலப்படமின்மை, அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.,) உற்பத்தி, காலாவதி நாள் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். எம்.ஆர்.பி.,யை விட அதிக விலைக்கு விற்பது, உரிய காலத்திற்குள் சேவைகளை வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவச் சேவை, வங்கிப் பரிவர்த்தனையில் ஏற்படும் குறைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்களுக்கு நிவாரணம் பெற முடியும் என்றார்.பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பாதுகாப்பான உணவுப் பொருட்களை கண்டறியும் வழிமுறைகள், உணவு, பெட்ரோல் உள்ளிட்டவற்றில் கலப்படங்களை கண்டறியும் சோதனைகள், போக்குவரத்து போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தஸ்டால்கள் அமைக்கப்பட்டன.மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ., பூமிநாதன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள், டி.ஆர்.ஓ., சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சதீஷ்குமார், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிக்குமார், கல்லுாரி முதல்வர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்.